தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது!
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வெளியிடுகிறார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீடு செய்யும் பணிகளில் அதிமுக வேகமாக செயல்பட்டு வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக-விற்கு திருவள்ளூர் (தனி), கடலூர், மத்திய சென்னை, விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். இதனையடுத்து மாலை 2 மணிக்கு மேல் ஐந்து தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிடுகிறார்.