பார் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட DJ - ராஞ்சியில் பயங்கரம்!
ராஞ்சியில் பாரில் பணிபுரிந்து வந்த டிஜேவை மர்ம நபர் ஒருவர் ஆளுயர ரைபிள் துப்பாக்கியை எடுத்துவந்து சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் செயல்பட்டு வரும் எக்ஸ்ட்ரீம் பாரில், டிஜேவாக வேலை பார்த்து வந்தவர் மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்த சந்திப் பிரமாணிக் என்ற சாண்டி. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 1.59 மணியளவில் மர்ம நபர் ஒருவர் ஆளுயர ரைபிள் துப்பாக்கியை எடுத்துவந்து பாரில் இருந்த டிஜேவை சுட்டுக் கொன்றுள்ளார்.
அந்த நபர், தனது காரில் இருந்து துப்பாக்கியுடன் இறங்குவதும், ரைபிள் வகை துப்பாக்கியை எடுத்துவந்து அங்கிருந்தடிஜே மீது நீட்டிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி இருந்தததை அறிந்த அந்த நபர் தனது டி சர்டை வைத்து முகத்தை மறைத்திருத்திருக்கின்றார். ரைபிளால் அந்த நபர் சுட்டதில் படுகாயமடைந்த டிஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ராஞ்சி காவல்துறையினர் அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அந்த பாரில் நேற்று இரவு 10.30 மணியளவில் அங்கு மதுபானம் அருந்த வந்த இரு பிரிவினரிடையே வாக்குவாதம் எழுந்ததாகவும், இதனால் ஒரு பிரிவினரை அங்கிருந்து வெளியேற்றியதுடன் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் பாரின் உரிமையாளர் விஷால் சிங் கூறினார்.