தீபாவளிக்கு தயாராகும் தின்பண்டங்கள்; சுவையில் அசத்தும் பள்ளபட்டி பலகாரங்கள்!
கரூரில், தித்திக்கும் தீபாவளி திருநாளுக்கு தெவிட்டாத தேன் சுவையோடு
மைசூர்பாகு, இனிப்பு பூந்தி, மிக்சர், அதிரசம் என இனிப்பு, கார வகைகள்
தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் தயாராகும் மைசூர்பாகு, இனிப்பு பூந்தி, பிக்சர் தமிழகம்,
இந்தியா மட்டுமல்ல வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் வகையில் பிரபலமானது.
இனிப்பு கார வகைகள் தயாரிப்பு பெரிய அளவில் நடத்தி வரும் இவர்கள் தற்போது
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் இரவு பகலாக இறங்கி
உள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் வாடிக்கையாளர்களின்
தேவைக்கு ஏற்ப ஆடரின் பேரில் சுமார் 2 ஆயிரம் கிலோ இனிப்பு பூந்தி, 3 ஆயிரம்
கிலோ மைசூர்பாகு, 2 ஆயிரம் கிலோ மிக்சர் என இனிப்பு காரவகைகள் தயாரிப்பில்
மும்முரமாக இருந்து வருகின்றனர். அதேபோல, கரூர் பகுதியில் பாரம்பரிய அதிரசம்
தயாரிப்பு அமோகமாக நடந்து வருகிறது.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் கடந்த 88 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட
ஸ்வீட் கடை தற்போது 100 ஆண்டுகளை தொட உள்ள நிலையில், நான்கு தலைமுறையாக
உறவினர்களைக் கொண்டு மைசூர்பாகு, இனிப்பு பூந்தி, மிக்சர் போன்ற பலகாரங்கள்
தரம் மற்றும் சுவையுடன் தயாரித்து வருகின்றனர்.
சுத்தமான பசும் நெய், தரமான கடலை மாவு, கலப்படமில்லாத எண்ணை என தரமாக, ஒரே
சுவையோடு தயார் செய்வதால் பள்ளபட்டி மைசூர் பாகு மற்றும் இனிப்பு பூந்தி ,
மிக்சருக்கு மவுசு அதிகமாக இன்று வரை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு
குறையாமல் இருந்து வருகிறது.
இதனால், இங்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் பல நாடுகளுக்கு செல்கிறது.
இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு கூரியர் மூலமாக அனுப்பி
வருகின்றனர். பள்ளப்பட்டியில் தயாராகும் இனிப்பு கார வகைகள் ரம்ஜான், பக்ரீத் போன்ற
பண்டிகைக்கு அடுத்த படியாத தீபாவளி பண்டிகைக்குத் தான் பெரிய அளவில்
தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரத்தியேகமாக ஏழு வகையான இனிப்புகளை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த வாரத்திலிருந்து இரவு பகல் பாராமல்
பூந்தி, மைசூர் பாகு, லட்டு, மிச்சர் ,அல்வா உள்ளிட்ட ஏழு வகையான இனிப்புகள்
தயாரித்து வருகின்றனர். தமிழக முதல்வரின் மஞ்சப்பை திட்டத்திற்கு முன்னோடியாகக் கடந்த 40 ஆண்டுகளாக மஞ்சப்பை மூலம் விநியோகம் செய்து வருகின்றனர்.
அதேபோல கரூர் கோவை சாலையில் கடந்த 13 ஆண்டுகளாக பாரம்பரிய அதிரசம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக இங்கு பெரிய அளவில் அதிரசம் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. தரமான பச்சரிசி, நயம் வெல்லம், சுக்கு போன்றவற்றைப் பயன்படுத்தி வீட்டு முறைப்படி சுகாதாரமான முறையில் அதிரசம் தயாரிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் பல வீடுகளில் அதிரசம் செய்ய மக்கள் சிரமப்படுவதால் எங்களது
தயாரிப்பு அதிரசம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வழக்கத்தை விட அதிக அளவில் அதிரசம், மிச்சர், கை
முறுக்கு, சீடை உருண்டை, தட்டடை போன்ற கார வகைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.