#Chennai | நெருங்கும் தீபாவளி... களைகட்டும் தியாகராய நகர் வீதிகள்!
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், புத்தாடைகள் வாங்க சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ளதால், அப்பகுதி எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
துணி வகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பைகள், நகைகள் என பல தரப்பட்ட பொருட்களின் ஒட்டுமொத்த விற்பனை கடைகள், சில்லறை கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகளை தன்னகத்தே கொண்டு, எந்நேரமும் பரபரப்பாக காட்சியளிக்கும் சென்னை தியாகராய நகர்.
வார விடுமுறை, வருடப்பிறப்பு, பொங்கல் பண்டிகை, தீபாவளி என பண்டிகை காலங்களில் எல்லாம் இங்கு சென்றுவிட்டால் அடியெடுத்து கூட வைக்க இயலாது. கண் எட்டும் தூரமெல்லாம் மனிதர்களின் தலைகள் மட்டுமே தெரியும். மூச்சுக்கூட விடமுடியாது. தற்போது தீபாவளி நெருங்கியுள்ள நிலையில், மக்கள் புத்தாடைகள் வாங்க அங்கு குவிந்து வருகின்றனர்.
தியாகராய நகர் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு வந்து செல்ல தற்போது முறையான வசதிகள் இல்லை. இதனால் வாகனங்களை நிறுத்திவிட்டு ஒரு கிலோமீட்டருக்கு மேலாக பொருட்கள் வாங்க மக்கள் நடந்து வரக்கூடிய சூழல் இருக்கிறது. ஆனாலும் கூட தெருவோரக்கடைகள் மற்றும் பெரிய கடைகள் என அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
இன்னும் வரும் நாட்களில் பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இந்த பகுதியில் மக்கள் வந்து செல்ல ஏற்றவாறு சரியான பாதை அமைப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.