தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை!
தீபாவளி பண்டிகைக்கான இறுதிகட்ட புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை
களைகட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், சிவகாசி என மாநிலம் முழுவதும் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில் தீபாவளி பண்டிகைக்காக சாரை சாரையாக பொது மக்கள் புத்தாடை வாங்குவதற்காக குவிந்துள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வண்ணாரப்பேட்டைக்கு வருகின்றனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களில் இருந்தும் வண்ணாரப்பேட்டைக்கு பொதுமக்கள் ஆடைகள் வாங்க வந்த வண்ணம் உள்ளனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் புத்தாடைகள், இனிப்புகள், வீட்டுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இதனால் இப்பகுதி அனைத்திலும் பொதுமக்களின் தலை மட்டுமே தெரியும் அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.
விழுப்புரம்
தீபாவளி பண்டிகையை நாளை கொண்டாட வெளியூர்களுக்கு சென்ற பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் விழுப்புரம் நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்
கடலூரில் தீபாவளி பண்டிகைக்கான இறுதிகட்ட புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை
களைகட்டியுள்ளது. கடலூர்- சிதம்பரம் சாலை மற்றும் நேதாஜி சாலையில் உள்ள துணிக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனையொட்டி குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு 110 கண்காணிப்பு
கேமராக்கள் பொறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசி
தீபாவளி கொண்டாட்டங்களில் பட்டாசு ரகங்கள் தான் முதன்மையாக இருந்து வருகிறது. நாடு முழுவதும் பட்டாசுகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் பட்டாசுகள் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும் என்பதாலும், விதவிதமான பட்டாசு ரகங்கள் மற்றும் வானவெடிகளை நேரில் பார்த்து வாங்கலாம் என்பதாலும், பட்டாசு பிரியர்கள் சிவகாசிக்கு அதிகம் சென்று தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.