தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் சந்தை - ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற, ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடு, மாடு மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், தீபாவளி
பண்டிகையின் போது பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து அசைவ உணவுகளை சமைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு உணவு அருந்தி மகிழ்வது வழக்கம். அந்த வகையில், தீபாவளி பண்டிகை அன்று இறைச்சி விற்பனையானது களைக்கட்டும் என்பதால், தீபாவளி பண்டிகையின் போது விற்பனைக்கு தேவையான ஆடு, மாடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளை முன்னதாக வியாபாரிகள் வாங்கி வளர்த்து வரும் நிலையில், பொதுமக்களும் வாங்கி வளர்த்து வருகின்றனர்.
அதன்படி, தென் மாவட்டங்களில் உள்ள பிரபல ஆட்டுச் சந்தைகளில் ஒன்றான பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையானது இன்று நடைபெற்ற நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்களது ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
மேலும், தீபாவளி பண்டிகை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வியாழக்கிழமைதோறும் நடைபெறும் கடைசி ஆட்டுச் சந்தையான இன்று ஆடு, மாடுகள், கோழிகள் விற்பனையானது களைக்கட்டியது.
குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை வாங்கினர்.
இதன் காரணமாக ஆடு, மாடு கோழிகளின் விலையானது தரத்திற்கு ஏற்ப அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, ஆடு ஒன்று ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையானது, கோழிகள் ரூ.500 முதல் ரூ.1500 வரையும், மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையும் தரத்திற்கு ஏற்ப விற்பனையானது.
மேலும், போட்டி போட்டுக் கொண்டு வியாபாரிகளும், பொதுமக்களும் ஆடு, மாடு கோழிகளை வாங்கிய நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையின் மூலம் ஒரு கோடிக்கு மேல் விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூபி.காமராஜ்