For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

EPS-க்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

01:58 PM Dec 08, 2023 IST | Web Editor
eps க்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி   உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Advertisement

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

Advertisement

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி,  முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும்,  இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி,  2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன்,  இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை வாதம் :-

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற முறையாக கையாளவில்லை.  கடந்த 2018ல் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் குறை காண முடியாது என்றும்,  புதிய விசாரணைக்கு நடத்துவதற்கு எந்த காரணமுமில்லை எனவும்,  ஆட்சி மாற்றம் காரணமாக மட்டுமே உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறி,  மனுதாரரான ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நீக்காமல் விசாரணையை மேற்கொள்வது சிரமமானது.

முதல் கட்ட விசாரணை என்பது குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர். முதல்வராக இருந்த போது லஞ்ச ஒழிப்பு துறையால் மேற்கொள்ளப்பட்டது தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நாங்கள் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நினைக்கிறோம்.  ஆனால் அதை சென்னை உயர்நீதிமன்றம் கூடாது என சொல்கிறது. இதை எப்படி ஏற்றுக் கொள்வது?  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது.

நீதிபதிகள் கேள்வி :-

லஞ்ச ஒழிப்பு துறையான உங்களை தொடர்ந்து விசாரிக்க தடுப்பது என்ன? நீங்கள் தாராளமாக விசாரிக்கலாமே? சட்டத்திற்கு உட்பட்ட எந்த விசாரணையையும் நீங்கள் தாராளமாக செய்யலமே?

லஞ்ச ஒழிப்புத்துறை வாதம் :-

அப்போதைய முதல்வரான ஈ.பி.எஸ் கீழ் தான் காவல்துறை இருந்தது.  அந்த வகையில் அவர்கள் விசாரணையில் குறை இருக்கலாம் என்பதால் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.  இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.  இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அரசியல் காழ்புணர்ச்சி, அரசு மாற்றம் என்பதால் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது என கூறுவது தவறு.

சட்டம் தன் போக்கில் செல்ல அனுமதிக்க வேண்டும். அரசாங்கம் மாறினாலும், மறு விசாரணை செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. விசாரணை நடத்தப்பட வேண்டும்.  அதைத் தடுக்க முடியாது.

நீதிபதிகள் கேள்வி :-

இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உரிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. அப்படி இருக்க நாங்கள் ஏன் தலையிட வேண்டும்?  சட்டத்தின் அடிப்படையில்,  சட்டத்திற்கு உட்பட்டு நீங்கள் தாராளமாக விசாரணை செய்யலாம். அதனை நீதிமன்றம் மறுக்கவில்லை.

ஆனால் கடந்த முறை லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு,  எந்த பிரச்சனையும் இல்லை என கூறப்பட்டது.  ஆனால் தற்போது வேறு விதமாக கூறுகிறீர்கள்.  சட்டம் எதை அனுமதிக்கிறதோ அந்த வகையில் விசாரணையை நடத்தலாமே?

லஞ்ச ஒழிப்புத்துறை வாதம் :-

இந்த விவகாரத்தில் அரசு மாற்றம் வந்தால் விசாரிக்கக்கூடாது என்று எங்கும் சட்டம் கூறவில்லை,  எனவே தான் மீண்டும் விசாரணை நடத்த கோருகிறோம்.

நீதிபதிகள் கருத்து:-

நாங்கள் எதையும் தடுக்கவும் இல்லை, அனுமதிக்கவும் இல்லை. சட்டத்தில் என்ன வழிவகை உள்ளதோ அதை கடைபிடியுங்கள் என்று நான் சொல்கிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் வாதம்:-

இந்த வழக்கில் மனுதாரராக இருந்தவர் தற்பொழுது ஆளுங்கட்சியை சேர்ந்தவராக உள்ளவர்.  அவர் தொடர்ந்து வழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து விட்ட ஒரு வழக்கில் மீண்டும் அனுமதி வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்கள்.  இதை அரசியல் என்று கூறாமல் என்னவென்று கூறுவது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வாதங்களை ஏற்க மறுத்து,  எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement