For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வரி பகிர்வில் பாகுபாடு புகார் | சென்னையில் கவனம் ஈர்க்கும் பேனர்கள்!

11:57 AM Feb 10, 2024 IST | Web Editor
வரி பகிர்வில் பாகுபாடு புகார்   சென்னையில் கவனம் ஈர்க்கும் பேனர்கள்
Advertisement

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு குறித்து நூதன முறையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன

Advertisement

பொதுவாக மத்தியில் ஆளும் அரசு தென் மாநிலங்களை புறக்கணிப்பதாகவும், இதனால் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற முழக்கம் தமிழகத்தில் 1960 முதல் இருந்து வருகிறது.  சமீபகாலமாக, இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்க துவங்கி உள்ளது. அதிக வரி செலுத்தும் மாநிலங்களான தென் மாநிலங்களுக்கு,  வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மத்திய அரசு குறைந்த அளவே வரிப் பகிர்வு அளிப்பதாக எழும் குற்றச்சாட்டே இந்த விவகாரத்திற்கு முக்கிய காரணம்.

இந்நிலையில், இந்த விவகாரம் பூதாகரமானதற்கு காரணமாக,  தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்காதது தான் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டு சென்னை,  வட மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கக் கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,  மத்திய அரசின் குழுவினரும் வெள்ள பாதிப்புகளை நேரில் வந்து ஆய்வு செய்திருந்தனர்.

இந்நிலையில்,  நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில்,  பிப்ரவரி 2ஆம் தேதி பேசிய ஸ்ரீபெரும்புதூர் எம்பியும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு,  “வெள்ள நிவாரண பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு சார்பில் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு ஒரு பைசா கூட வழங்கவில்லை.  மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது” என பேசினார்.  மேலும்,  நிவாரணம் வழங்காத மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 8ஆம் தேதி எம்பிக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

முன்னதாக,  வெள்ள நிவாரணத்திற்காக கோரிய தொகை வழங்காததால்,  அதிக ஜிஎஸ்டி வரி செலுத்தும் மாநிலமாக இருந்தும்,  தங்களுக்கு நிவாரணத் தொகையை வழங்காமல் இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோல், 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கர்நாடக மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில்,  முறையான வரிப் பங்கீடு செய்யாததாக மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லியில் கர்நாடக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,  கேரளாவின் கடன் வாங்கும் வரம்பு,  வருவாய் பற்றாக்குறை மானியத்தைக் குறைத்ததற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில்,  டெல்லி ஜந்தர் மந்தரில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக  9-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் நிதி பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு,  கேரளா ஆகிய மாநில அரசுகள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில்,  மத்திய அரசின் செயல்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் திமுக சார்பாக அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.  அதன்படி நெல்லையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்,  சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் வரும் பயணிகள், ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கும் திமுகவினர் அல்வா வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அல்வாவோடு இணைக்கப்பட்ட நோட்டீசில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ZERO என அச்சடித்து அதில் ஒரு அல்வா துண்டை இணைந்து வழங்கினர்.

இப்படி ஆங்காங்கே இது போன்று மத்திய அரசின் செயல்பாட்டை எதிர்த்து தமிழ்நாடு மட்டுமின்றி,  கேரளா மற்றும் கர்நாடகாவிலும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில்,  சென்னையில் கடந்த இரு தினங்களாக பல்வேறு இடங்களில் முட்டை படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.  எங்கள் வரிப்பணம் எங்கே? என கேட்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில்,  மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக் காட்டும் வகையில்,  தமிழ்நாட்டுக்கு Zero என "முட்டை" படம் இடம்பெற்றுள்ளது.  நடிகர் வடிவேலு, நகைச்சுவை காட்சி ஒன்றில் தன்னிடம் எதுவும் இல்லை என காட்டும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

மேலும்,  சென்னை கோயம்பேடு பகுதியிலும்,  மத்திய அரசை டார்கெட் செய்து இது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement