குறைந்து வரும் நீர் இருப்பு - ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதை நிறுத்த முடிவு..!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு அளவு குறைந்து வருவதால் ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் விரைவில் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, கண்ணன்கோட்டை, சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் சமீபத்தில் பெய்த கனமழையில் அதன் முழுகொள்ளளவை எட்டின. அதன் காரணமாக பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட 5 ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏரிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், ஏரிகளின் நீர் இருப்பு குறைந்துள்ளது.
இதையும் படியுங்கள் :முதல் டி20 போட்டி : இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்..!
ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்:
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்இருப்பு சனிக்கிழமை நிலவரப்படி, 24 அடி கொள்ளளவு அடியாக குறைந்துள்ளது. மேலும், ஏரியிலிருந்து விநாடிக்கு 2,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் தண்ணீர்த் தேக்கம் 34.45 அடியிலிருந்து 34.20 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்கு 3,190 அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
அதேபோல், சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 17.88 அடியிலிருந்து 17.25 அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்கு 1,720 கன அடி தண்ணீர்
வெளியேற்றப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் 20.22 அடி வரை நீர் இருப்பு உள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்கு 300 கன அடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல், கண்ணன்கோட்டை ஏரி முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் விநாடிக்கு 185 கன அடி வெளியேற்றப்படுகிறது.
ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், விரைவில் உபரி திறப்பை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.