நியூஸ்7 தமிழ் எதிரொலி - விமானம் மூலம் சென்னை திரும்பும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னிந்திய அணி சார்பில், தமிழகத்திலிருந்து மதுரை, சேலம், ராமநாதபுரம், அரியலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 6 வீரர்கள் மற்றும் 1 மேலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
போட்டி முடிந்து இன்று (பிப்.20) அதிகாலை 1 மணியளவில் வாரணாசியில் இருந்து சென்னை வருவதற்காக கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 AC வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், கும்பமேளா விழா காரணமாக
ரயிலை நெருங்க முடியாத அளவு கூட்டம் இருந்துள்ளது. இதனால் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியவில்லை. சென்னை திரும்ப வழியில்லாமல் அணி தலைவர் சச்சின் சிவா, மேலாளர் ஹரி உள்ளிட்ட ஏழு பேர் வாரணாசி
ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நியூஸ் 7 தமிழ் வாயிலாக கோரிக்கை விடுத்தார்கள். இதைத்தொடர்ந்து இதுதொடர்பான செய்தி நியூஸ் 7 தமிழில் ஒளிப்பரப்பப்பட்டது. செய்தி எதிரொலியாக வாரணாசியில் தவித்து வரும் மாற்றத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலமாக அழைத்து வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சிவாவை தொடர்பு கொண்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, மாற்றுத்திறனாளி கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வாரணாசியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு தேவையான பண உதவிகளை உடனடியாக செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.