“இயக்குநர் வினோத் என்னை செருப்பால் அடித்திருக்கிறான்” - கொட்டுக்காளியைப் பாராட்டிய மிஷ்கின்!
கொட்டுக்காளி திரைப்படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக நான் நிர்வாணமாக நிற்கவும், நடனமாடவும் தயார் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி, மலையாள நடிகை அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கொட்டுக்காளி’. ‘கூழாங்கல்’ வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஆக.23-ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் லிங்கு சாமி, மிஷ்கின், வெற்றிமாறன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“மேடையில் பேசும் பொழுதாவது நாம் உண்மையை பேச வேண்டும் என்று நினைக்கிறேன். காரணம் என்னவென்றால், வீட்டில் நாம் நிறைய பொய் பேசுகிறோம். இந்த மேடையில், நான் உண்மையை மட்டுமே பேச வந்திருக்கிறேன். அவ்வளவு தைரியத்தையும், நெஞ்சுரத்தையும், ரத்தத்தில் கொதிப்பு நிலையையும் எனக்குள் கொண்டு வந்திருக்கிறது இந்த கொட்டுக்காளி திரைப்படம்.
வினோத் இந்தப் படத்திற்கு ஏன் கொட்டுக்காளி என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயன் பட பூஜையின் போது தான் நான் வினோத்தை சந்தித்தேன். அப்போது அவன் தன்னுடைய கூழாங்கல் படம் குறித்து பேசும் போது நான், ஆமாம் எல்லோரும் அந்தப் படத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறாய் என்று கேட்பதற்குள், அவன் அடுத்தப்படத்தை ஆரம்பித்து விட்டதாகச் சொன்னான். உண்மையில் அப்போது நான் கொஞ்சம் காலம் எடுத்துக்கொண்டு படம் எடு என்று சொல்ல வந்தேன்.
இதையடுத்து, நான் படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று கேட்டேன். அதற்கு அவன் யாரும் கிடையாது என்று சொன்னான். அதை கேட்ட போது, இவன் என்ன பெரிய ஆள் போல பேசுகிறான் என்று தோன்றியது. ஆனால் கொட்டுக்காளி திரைப்படத்தை பார்த்த பொழுது, வினோத் என்னை செருப்புக் கழற்றி அடித்திருக்கிறான் என்பது தெரிய வந்தது.
நான் தற்போது இரண்டு படங்களை பார்த்திருக்கிறேன். ஒன்று மாரிசெல்வராஜ் இயக்கிய வாழை. அந்தப்படத்தை பார்த்த போது, கிட்டத்தட்ட ஒரு வாரம் எனக்கு தூக்கமே இல்லை. பைத்தியம் பிடித்தது போல இருந்தேன். கொட்டுக்காளி படத்தை பார்த்த பின்னர், எனக்கு கிட்டத்தட்ட பேயே பிடித்து விட்டது. அவன் தன்னுடைய படத்திற்கு இசையமைப்பாளர் வேண்டாம் என்று முடிவு எடுத்தது ஏதோ குருட்டாம்போக்கில் எடுத்தது அல்ல.
இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று நினைக்கிறேன். என்னுடைய குழந்தை பிறந்த பொழுது நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேனோ அதே மகிழ்ச்சியை இந்தப் படத்தை பார்த்த பின்னர் நான் அடைந்தேன். இந்தப் படத்தை மக்கள் வந்து பார்ப்பதற்காக நான் நிர்வாணமாக ஆடுவதற்கு கூட தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.