இயக்குநர் கே.பாக்யராஜின் அதிர்ச்சி குற்றச்சாட்டு! உண்மையை வெளிக்கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!
கோபிசெட்டி பாளையம் பகுதியில் ஆற்றில் குளிக்க செல்வோர் கொல்லப்படுவதாக இயக்குநர் கே.பாக்யராஜ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், உண்மை என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.
பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், கோபிசெட்டி பாளையம் பகுதியில் உள்ள அம்பாரம்பளையம் ஆற்றுக்கரையில் சிலர் சுற்றுலா வருவது வாடிக்கை. அவ்வாறு வரும் சிலர் குளிக்கும் போது மாயமாகி விடுகிறார்கள். காணாமல் போனவர்களை, உறவினர்கள் அப்பகுதியில் உள்ள நீச்சல் தெரிந்த ஒருவரிடம் அணுகினால், அவர் ஒரு சில ஆயிரங்களைப் பெற்றுக் கொண்டு தண்ணீரில் இறங்கி சில மணி நேரங்கள் கழித்து உயிரிழந்தவர்களின் உடலை எடுத்து தருகிறார்.
ஆனால் நீச்சல் சரியாக தெரியாதவர்களை குறிவைத்து கொல்வதே உடலை மீட்டுத்தரும் நபர்தான். இறந்தவரின் உடலை வைத்துப் பணம் பறிக்கலாம் என்பதால் இந்தப் படு பாதகச் செயலை அந்த நபரே செய்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் பாக்கியராஜ்.
இந்த நிலையில், இயக்குநர் கே.பாக்யராஜின் குற்றச்சாட்டிற்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மறுப்புத் தெரிவித்துள்ளார். அதில், கே.பாக்யராஜின் குற்றச்சாட்டு ஆதாரம் அற்றது, இது தொடர்பாக ஒரு வழக்கு கூட அந்த பகுதியில் பதிவாகவில்லை. வதந்தியை பரப்புவது குற்றமாகும் எனத் தெரிவித்துள்ளார்.