For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பொதுமக்களை நேரடியாக பாதிக்கும்” - ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு இவ்வாறு கூறுவது ஏன்?

தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
11:40 AM May 22, 2025 IST | Web Editor
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
“பொதுமக்களை நேரடியாக பாதிக்கும்”    ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு இவ்வாறு கூறுவது ஏன்
Advertisement

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்தாலும், மக்கள் நகை வாங்க காரணம் தங்கள் உடனடி தேவைக்கு அவற்றை வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்பதே முக்கியக் காரணம். அதிலும் வட்டிக் காரணமாக பலரும் தனியார் அடகு கடைகளை விட வங்கிகளையே நாடுகின்றனர்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விதிமுறைகள் மக்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது. அதாவது முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ளலாம்.

தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின்னர், இந்த முறை முற்றிலும் மாறியது. குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும். இந்த கட்டுப்பாடு அனைத்து தரப்பினரையும் பெருமளவு பாதித்தது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தகவலாக நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அவை பின்வருமாறு,

1. தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும். தற்போது 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்கப்படும்.

2. தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.

3. வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.

4. தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும்.

5. தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.

6. ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும்.

7. தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும்.

8. தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

9. கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால் 7 வேலை நாட்களுக்குள் தங்கத்தை திருப்பி தர வேண்டும்.

10. அடமான நகையை திருப்பி தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5, 000 பணத்தை கடன் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும். என தெரிவித்துள்ளது.

மேற்கண்ட விதிமுறைகளால் மக்கள் மருத்துவ செலவு, விபத்து போன்ற அவசரத்திற்காக கடன் வாங்க செல்லும்போது, அலைக்கழிக்கப்படுவார்கள். குறைந்த அளவே கடன் பெறமுடியும். இதனால் சாமானிய மக்கள் பெரும் அளவிற்கு பாதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டுப்பாட்டு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

“ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில்,  அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.

குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.

அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் இந்த புதிய விதிமுறைகளால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதையே அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement