இந்தியா-சீனா இடையே அக்.26 முதல் நேரடி விமான சேவை!
கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2020ல் இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் உண்டானது. இதன் காரணமாக, கோவிட் பெருந்தொற்றுக்கு பின் மற்ற நாடுகளுக்கு சீனாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்து துவக்கப்பட்டாலும், இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து துவக்கப்படவில்லை.
இதன் பிறகு இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது நேரடி விமானப் போக்குவரத்தை துவக்குவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வரும் அக்டோபர் 26ம் தேதி நேரடி விமான சேவையை துவக்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "தூதரக ரீதியில் ஏற்பட்ட முடிவுகளை தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு வரும் 26 ம் தேதி முதல் தினசரி விமான சேவை துவங்கும்.
டெல்லியில் இருந்து குவாங்கு நகருக்கு விமான சேவையை துவக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த பயணத்திற்கு ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் பயன்படுத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.