பிரச்சாரத்தின் போது சாலை ஓரத்தில் நோன்பு திறந்த திண்டுக்கல் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்!
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் இன்று மாலை சாலை ஓரமாகவே நோன்பு திறந்தார்.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரத் களம் காண்கிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன்
ஆகியோர் திண்டுக்கல்லின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
முகமது முபாரக் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30 நாட்கள் நோன்பு இருந்து கொண்டே திண்டுக்கல் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று மாலை செட்டிநாயக்கன்பட்டி , மீனாட்சி நாயக்கம்பட்டி , நந்தவனப்பட்டி , கொத்தம்பட்டி பகுதிகளில் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்துள்ளார். இதையடுத்து என்எஸ் நகரை நோக்கி செல்லும்போது நோன்பு திறக்கும் நேரம் ஆனதால் சாலையின் ஓரத்தில் பிரச்சார வாகனத்தை நிறுத்திவிட்டு வேட்பாளர் நோன்பு திறந்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள்
மற்றும் தொண்டர்கள் அனைவரும் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறந்தனர். அதனைத் தொடர்ந்து என்எஸ் நகர் பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது வாக்காளர்கள் மத்தியில் , எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள் என்றால் திண்டுக்கல்
மாவட்டத்தை இந்தியாவின் முன்னோடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் என்று கூறி
வாக்கு சேகரித்தார்.