For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Dindigul | தனியார் மருத்துவமனை தீ விபத்து - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

07:15 AM Dec 13, 2024 IST | Web Editor
 dindigul   தனியார் மருத்துவமனை தீ விபத்து   பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
Advertisement

திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

திண்டுக்கல் - திருச்சி சாலையில் காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை தரைத்தளம் மற்றும் 4 மாடிகளை கொண்டது. இந்த மருத்துவமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், நேற்று (டிச.12) இரவு 9 மணியளவில் மருத்துவமனையின் தரைத்தளத்தில் உள்ள வரவேற்பு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென எரிந்து தரைத்தளம் முழுவதும் பரவியது.

இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் கிளம்பியது. பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தும், தரைத்தளம் முழுவதும் தீ பரவியது. இதனையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் நான்கு தளங்களுக்கும் புகை பரவியது. தீ விபத்தினால் ஏற்பட்ட புகைமூட்டத்தினால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவர்கள் என அனைவரும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.

தொடர் போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடம் மருத்துவமனையில் சிக்கிக்கொண்ட 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மற்ற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்தின் போது லிப்டில் வந்த 3 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை லிப்டில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்காக தீயணைப்புத் துறையினர் லிப்டை போராடி உடைத்தனர். ஆனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு கொண்டதுடன், தீக்காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Advertisement