திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! - ரூ. 2லட்சம் பறிமுதல்!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 14 ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுப்பாட்டில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் ஆண்டுதோறும் கணக்கு ஆய்வு செய்யும் தணிக்கை குழு கடந்த இரு நாட்களாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆண்டுதோறும் உள்ள வரவு செலவுகளை ஆய்வு நடைபெற்றது.
இந்த தணிக்கை குழுவில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும்
கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம்
வழங்கியதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை
கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அதிரடியாக நேற்று (மே - 27ம் தேதி) மாலை தணிக்கை குழு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : பராமரிப்பு பணிகள் : சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை ரயில்கள் இந்த நேரத்தில் இயங்காது!
மேலும், அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அதற்கான விவரங்களை
சேகரித்தனர். இதில் சில அலுவலர்களிடம் கணக்கில் வராத பணம் கூடுதலாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை தனியாக விசாரித்தனர். ரூ.2 லட்சத்திற்கு மேல் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் சோதனை அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.