டிஜிட்டல் தளங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி குறித்த ‘ஜெமினி ஏஐ’ கருத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
‘ஜெமினி ஏஐ தளம்’ எப்போதும் நம்பகமானதாக இருக்காது என்று பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த கூகுள் நிறுவனத்தின் பதிலை ஏற்க மறுத்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வது டிஜிட்டல் தளங்களின் சட்டபூர்வ கடமை என அந்நிறுவனத்தை சாடியுள்ளார்.
சாட்ஜிபிடி-க்கு போட்டியாக பல்வேறு டெக் நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் கூகுளின் ’ஜெமினி’ சாட்பாட் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அண்மையில், இனபேதம் அடிப்படையில் ஏஐ படங்களை வழங்குவதாக ஜெமினி குற்றச்சாட்டுக்கு ஆளானது. அடுத்தபடியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தான ஒருதலைப்பட்சமான கருத்தினை வெளியிட்டதாக புதிய சர்ச்சையில் சிக்கியது.
ஜெமினி ஏஐயிடம் ‘பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாசிஸ்டா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்தும் அதே கேள்வி எழுப்பப்பட்டபோது, இந்த தளம் சாமர்த்தியமாக பதில் அளித்தது. ஆனால் பிரதமர் மோடி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘பாஜகவின் இந்து தேசிய சித்தாந்தம், எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறை, மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை’ உள்ளிட்டவற்றை முன்வைத்து மோடி குறித்து ஆட்சேபகரமான பதிலை ஜெமினி தந்தது. இவை சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும் இந்திய அரசின் கவனத்துக்கும் ஆளானது.