டிஜிட்டல் கைது மோசடி - ரூ.71 லட்சம் சுருட்டிய குஜராத் மாநில இளைஞர்கள் கைது!
‘டிஜிட்டல் கைது’ மோசடியில் ஈடுபட்டு ரூ.71 லட்சம் சுருட்டிய இரண்டு குஜராத் மாநில இளைஞர்கள் கைது செய்துதிருப்பதாக இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 17.12.2024 அன்று திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் டிஜிட்டல் கைது தொடர்பான மோசடியால் பாதிக்கப்பட்டு ரூ.71,00,000/- அளவிலான தொகையினை இழந்துள்ளதாக தேசிய சைபர் குற்றப் புகார் வலைதளத்தில் (NCRP Portal) புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், புலன் விசாரணையில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் சூரத் நகரத்தைச் சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவருக்கு 13.12.2024 அன்று காலை 10.06 மணியளவில் ஒரு வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதில், மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஒரு சிபிஐ அதிகாரி என்று கூறிக்கொண்டு. மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்தாரருக்கு எதிராக பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக புகார்தாரர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மோசடியில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் புகார்தாரரிடம் கைது செய்யப்படுவதை தவிர்க்க வேண்டுமானால் அவர்களது அறிவுறுத்தலின்படி செயல்படுமாறு புகார் தாரரை வற்புறுத்தியுள்ளதோடு, புகார்தாரரின் பணத்தினை மேற்படி குற்றவாளிகளால் வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றுமாறும் கூறியுள்ளனர். மேலும், மாற்றப்படும் தொகை ரிசர்வ் வங்கியால் சரிபார்க்கப்படும் என்றும், சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும் புகார்தாரரின் வங்கி கணக்கிற்குத் திருப்பி வரவு வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பி புகார்தாரரும் ரூ.71,00,000/- தொகையை மோசடி நபர்களால் வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
அதனை தொடர்ந்து புகார்தாரரால் மோசடி நபர்களை தொடர்புகொள்ள இயலவில்லை. இறுதியில், தான் சைபர் குற்றவாளிகளின் டிஜிட்டல் கைது தொடர்பான மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த புகார்தாரர் இழந்த பணத்தினை மீட்டுத்தருவதற்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகள் வேண்டி தேசிய இணையவழி குற்றப் புகார் வலைதளத்தில் (NCRP Portal) புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் புகார்தாரர் இழந்த ரூ.71,00,000/-முழுத்தொகையும் குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியை சேர்ந்த குற்றவாளியின் கணக்கிற்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டதோடு. குற்றவாளிகளை கைது செய்வதற்கென திருவள்ளூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவானது நேரடியாக சூரத்துக்குச் சென்று முதன்மை கணக்கு வைத்திருந்த முதன்மை மற்றும் உடந்தை குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட முதன்மை குற்றவாளியின் வங்கி கணக்கு எண்ணானது இந்தியா முழுவதும் உள்ள 9 பிற வழக்குகளுடன் தொடர்புடையது என்பது புலன் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முதன்மை குற்றவாளியான Al-சோஜித்ரா ஹிரென், வயது 26. உடந்தை குற்றவாளியான A2- ரோகாட் மீட்குமார். வயது 30. ஆகிய இருவரும் திருவள்ளூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவல் அடைப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருவள்ளுர் இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகளால் குற்றவாளிகளின் வங்கி கணக்கிலிருந்த தொகை ரூ.5,66,872/- யானது முடக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, புகார்தாரரிடம் மோசடி செய்யப்பட்ட தொகையினையும் திருப்பி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைகள்:-
1. டிஜிட்டல் கைது எனும் நடைமுறையானது தற்போதுவரை சட்டத்துறையிலோ, காவல் துறையிலோ சட்டப்பூர்வமான நடைமுறையில் இல்லை. எனவே, யாராவது உங்களை தொலைபேசியில் டிஜிட்டல் கைது செய்ததாகக் கூறினால் தயவுசெய்து பீதி அடைய வேண்டாம்.
2. மோசடி செய்பவர்கள் சிந்திப்பதற்கான நேரத்தினை குறைத்து, அவசர் உணர்வை உருவாக்குகிறார்கள். எனவே. மேற்படி மோசடி நபர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் நம்பகமான நண்பர்கள் மற்றம் குடும்பத்தினரை அணுகவும்.
3. உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்ஆப்-களில் உள்ள எந்தவொரு அறியப்படாத குழுக்களிலும் சேர வேண்டாம்.
4. சைபர் குற்றங்கள் பெருகிவரும் உலகில் யாரையும் நம்ப வேண்டாம். முன் எச்சரிக்கையாக இருக்கவும்.
5. மின்னஞ்சல் தொடர்பான மோசடிகளில் அனுப்புநரின் முகவரியை கவனமாகச் சரிபார்க்கவும். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் போலியான மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி பயன்படுத்துகிறார்கள். அவை கிட்டத்தட்ட முறையானவற்றுடன் ஒத்துதாகவே தோன்றுகின்றன. ஆனால், சிறிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.
6. அவசர மற்றும் சந்தேகத்திற்கிடமான கோரிக்கைகளைக் கவனியுங்கள். உங்கள் கணக்கை சரிபார்த்தல், கடவுச்சொல்லை மீட்டமைத்தல் அல்லது பணத்தை மாற்றுவது போன்ற உடனடி நடவடிக்கைகளுக்கு தங்களின் மின்னஞ்சல் தொடர்பான தகவல்களை கேட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.
7. அடையாளம் தெரியாத அந்நிய நபர்களுக்கு தொலைபேசியில் தனிப்பட்ட அல்லது நிதித் தகவலைப் பகிர வேண்டாம்.
8. சைபர் மோசடிகள் மற்றும் சைபர் குற்றவாளிகளின் ஏமாற்றும் நுட்பங்கள் பற்றி தகவல்களை அறிந்து விழிப்புணர்வுடன் இருங்கள்.
9. முக்கியமான வங்கி மற்றும் பிற கணக்குகளுக்கு இரண்டு காரணி அங்கீகாரத்தினைப் (Two-Step Verification) பயன்படுத்தவும்.
புகாரளித்தல்:-
நீங்கள் இதுபோன்ற இணையவழி குற்ற மோசடிகளுக்கு ஆளாக நேரிட்டால், சைபர் கிரைம் பிரிவின் கட்டணமில்லா உதவி எண்ணான 1930 என்ற எண்ணை அல்லது www.cybercrime.gov.inல் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.