“எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை” - விளக்கம் அளித்தார் #Irfan!
தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவத் துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு யூடியூபர் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆனநிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் குழந்தையின் முகத்தை முதல்முறையாக காட்டினார்.
தொடர்ந்து தன் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை, இர்ஃபானே வெட்டுகிறார். இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு, ஊரக நலப்பணி துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை நீக்க வேண்டும் என மருத்துவத்துறை உத்தரவிட்டது. தொடர்ந்து, இர்ஃபானை பிரசவ அறைக்குள் அனுமதித்ததற்கும், தொப்புள் கொடியை வெட்டியதற்கும் விளக்கம் கேட்டு மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அம்மருத்துவமனை மீதும், பெண் மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை அரங்கிற்கு கேமராவுடன் சென்று தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், தான் வெளிநாட்டில் இருப்பதால் தனது உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடிதத்தின் மூலமாக இர்பான் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தியிடம் இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.