For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சட்டத்தை மீறி எந்த செயலையும் செய்யவில்லை" - நடிகர் #Nagarjuna வேதனை!

03:58 PM Aug 24, 2024 IST | Web Editor
 சட்டத்தை மீறி எந்த செயலையும் செய்யவில்லை    நடிகர்  nagarjuna வேதனை
Advertisement

விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டதாக N-Convention அரங்கு இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நிவாரணம் கோரப்போவதாகவும் நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

Advertisement

மாதப்பூரில் உள்ள N-Convention அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில், 3000 பேர் அமரக் கூடிய வகையில் நிறுவப்பட்ட ஒரு பிரம்மாண்ட அரங்காகும். N Convention என்ற பெயரிலான இந்த அரங்கை N 3 என்டர்ப்ரைசஸ் கட்டியெழுப்பியது. இந்த N 3 என்டர்ப்ரைசஸ் நடிகர், தயாரிப்பாளர் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் நல்லா ப்ரீத்தம் இணைந்து நடத்தும் நிறுவனம்.

இந்நிலையில் இன்று (ஆக. 24) காலை 11 மணியளவில் அரங்கத்துக்கு வந்த ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கடந்த ஜூலை 17-ல் தான் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இயங்க ஆரம்பித்த பின்னர் மேற்கொள்ளப்படும் முதல் பெரிய நடவடிக்கை.

N Convention அரங்கம் தும்மிடிகுண்டா ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் மழை நீர் வடிகால் தடைபட்டு மழை பெய்யும் போதெல்லாம் 100 அடி சாலை, ஐயப்பா காலனி மற்றும் பிற பகுதிகள் வெள்ளக்காடாக ஆகின்றன என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக நாகார்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “N-Convention அரங்கு சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். எனது நற்பெயரைப் பாதுகாப்பதற்காகவும், சட்டத்தை மீறி நாங்கள் எந்தச் செயலையும் செய்யவில்லை என்பதை தெரிவிக்கும் வகையிலும் சில உண்மைகளை பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை.

தனியார் நிலத்தின் உள்ளே கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை இடிக்க சட்டவிரோதமான முறையில் நோட்டீஸ் பிறப்பிக்க தடை உத்தரவு உள்ளது. ஆனால், தவறான தகவலின் அடிப்படையில் இன்று அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது. இன்று காலை கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே அதனை இடித்திருப்பேன்.

நாங்கள் தவறான கட்டுமானத்தை மேற்கொள்ளவில்லை. ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறேன். அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறான இந்த நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் தகுந்த நிவாரணத்தை நாங்கள் கோருவோம்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement