Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“உங்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா இயக்கம் வைத்துள்ளோம்?” - விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

09:15 PM Dec 07, 2024 IST | Web Editor
Advertisement

பிறர் நினைப்பதை, விரும்புவதை சொல்ல வேண்டும், முடிவாக எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் எனவும், அவர்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா நாங்கள் இயக்கம் வைத்துள்ளோம் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே எழுதிய அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூலான ICONOCLAST நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், தமிழக அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த விழா மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,

“Iconoclast என்றால் ஒரு பிம்பத்தை உடைப்பது என்று பொருள். அம்பேத்கர் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்ட பிம்பங்களை உடைத்து நொறுக்கி சிதைத்தவர். 22 அரை கோடி மக்கள் அம்பேத்கரை ஏற்றுக்கொண்டு உணர்ச்சிபூர்வமாக பின்பற்றுகிறார்கள். அம்பேத்கர் கொண்டு வந்ததில் இந்திய அரசியலமைப்பு சட்டமும், புத்த தர்மம் இரண்டும் அவர் படைப்புகளில் உச்சமானது. புத்த தர்மம் சமூக நீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் புதிய கட்டுமானங்களுக்கான ஆதாரமாக விளங்கியது. அம்பேத்கரை வணிகப் பொருளாகவோ, வழிபாட்டு பொருளாகவோ பயன்படுத்தக்கூடாது.

அம்பேத்கர் கருத்துக்களை தெரிந்துகொள்ளாமல் எங்கள் சமூகர், எங்கள் மீட்பர் என்று பின்பற்றக் கூடாது. அம்பேத்கர் பேத்தியின் கணவர் தான் ஆனந்த் டெல்டும்டே. அவரே அம்பேத்கரின் வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளது சிறப்பு மிக்கது. அம்பேத்கரின் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்து ஆதாரப்பூர்வமான தரவுகளோடு காலத்தின் தேவையாக வரலாற்றை ஆனந்த் டெல்டும்டே எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை தமிழ் படுத்தி வெளியிடக்கூடிய உரிமையை ஆனந்த் டெல்டும்டே எங்களுக்கு தர வேண்டி கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு அவர் இசைவு வழங்கியுள்ளார்.

அம்பேத்கரை இந்துத்துவ தலைவர் என அடையாளப்படுத்துகிறார்கள். மிகுந்த வலியோடு சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் தலித்துகள் பாஜகவை ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை காலுன்ற செய்யாததில் விசிக பங்கு அளப்பரியது. தற்காலிக நடவடிக்கைகாக அம்பேத்கரின் பாதையை நாம் நழுவி விட முடியாது. அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால் இந்த நாட்டிற்கான அரசியலமைப்புச் சட்டத்தை சங்கியோ அல்லது சாவர்கரோ எழுதி இருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கும்.

பெரியாரை நேரடியாக எதிரியென காட்டுபவர்கள், அம்பேத்கரை நேரடியாக எதிரி என கூற முடியாது. அம்பேத்கரை பற்றி அதிகம் பேசுகிறவர்கள் வலது சாரிகள். மக்களின் emotional bond ஐ பாஜக பிடித்து வைத்துள்ளது. அதுதான் பாஜகவின் வெற்றிக்கு காரணம். விசிகவின் பணி தமிழ்நாட்டின் எல்லையோடு முடிந்து விடக்கூடாது. இந்தியா முழுவதும் செல்ல வேண்டிய தேவை உள்ளது. கூட்டணியில் தொடர வேண்டும் என்பதற்கான சண்டை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் நினைப்பதையும், அவர்கள் விரும்புவதையும் சொல்ல வேண்டும், அவர்கள் விரும்புவதை முடிவாக எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா நாங்கள் இயக்கம் வைத்துள்ளோம்? எங்களுடைய நிலைப்பாட்டில் விசிக உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளது. எது எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாமா? இந்த வாய்ப்பை விட்டால் என்ன ஆவது. நாங்கள் 100% அம்பேத்கரை பின்பற்றக்கூடியவர்கள். அம்பேத்கர் எங்களுக்கு கருத்தியல் அடையாளம். அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும் என்பது நம்முடைய நோக்கங்களில் ஒன்று, அந்த அதிகாரம் எதற்கு பயன்பட வேண்டும் என்பது முக்கியமானது யாருக்கு பயன்பட வேண்டும் என்பது முக்கியமானது. அந்த அதிகாரத்தின் மூலம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது முக்கியமானது.

விசிக தெளிவோடுதான் எல்லாவற்றையும் அணுகுகிறது. தடுமாறுகிறார் திருமா, பின் வாங்குகிறார் திருமா என்கிறார்கள். பிறர் தடுமாறுகிறார் என்று சொல்வதனால் விசிகவினருக்கு எந்த தடுமாற்றமும் ஏற்பட்டு விடக்கூடாது. என் மீது உள்ள நம்பிக்கையை எப்போதும் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய சுயமரியாதையை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. நம்முடைய தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. நம்முடைய கருத்தியலை மதிப்பீடு செய்யக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் யாருக்கும் தகுதி இல்லை.

கருத்தியலில் உறுதியோடு இருக்கிறோம் தெளிவாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்த தேவையில்லை. எல்லோருக்குமான தலைவர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ளாததற்கான விளக்கத்தை கூறினேன். அது தான் கேள்விக்கான பதில், அது தான் குழப்பத்திற்கான தீர்வு. ஆனந்த் டெல்டும்டே எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்”

இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
Aadhav ArjunaAmbedkarDMKEllorkumana Thalaivar AmbedkarNews7TamilthirumavalavanVCK
Advertisement
Next Article