"விஜய் போதும்., திருமா தேவையில்லை" என்கிற முடிவை விகடன் எடுத்ததா? - திருமாவளவன் விளக்கம்!
விஜய் போதும்., திருமா தேவையில்லை என்கிற முடிவை விகடனால் எப்படி எடுக்க முடிந்தது?அதற்கு என்ன காரணம் என்று எவரும் அலசவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6ம் தேதியான இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” எனும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஆளுமைகள் அம்பேத்கர் குறித்து எழுதிய கட்டுரைகளை தொகுப்பாக ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் வெளியிடுகிறது. மேலும் இப்புத்தகத்தை விகடன் குழுமம் பதிப்பிட்டுள்ளது.
நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜய்யும் பங்கேற்க இருந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சில காரணங்களால் திருமாவளவன் இந்த விழாவில் பங்கேற்கமாட்டார் என விசிக தரப்பில் தெரிவிகக்ப்பட்டது. இந்த நிலையில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” இது அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும் நூல். ஆதவ் அர்ஜூனாவின் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்னும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும். இது அம்பேத்கரின் நினைவு நாளான இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது.
முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் என்னுடைய நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஏப்ரல் 14 , அம்பேத்கரின் பிறந்தநாளில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவதாகவும், நான் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லப்பட்டது. அந்நிகழ்வில் ஆங்கில 'இந்து இதழின் ஆசிரியர் ராமும், மும்பையிலிருந்து ஆனந்தடெல்டும்டே பங்கேற்கவிருப்பதாகத் திட்டம் இருந்தது. ஆனால், அந்நிகழ்வு திட்டமிட்டவாறு நடைபெறாமல் தள்ளிப்போனது.
சில மாதங்களுக்குப் பின்னர் முதலமைச்சர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், ராகுல்காந்தியை அழைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியும்கூட நிறைவேறவில்லை என்றும் தகவல்கள் கிடைத்தன. அதன் பின்னர் நடிகர் விஜய் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலும், அழைப்பிதழ் அச்சிடப்படாமலும் இருந்த சூழலாகும். நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.விஜய்யின் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது.
அதாவது. "டிசம்பர்-06, விஜய் திருமா ஒரே மேடையில்' என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது. இது தான் அவ்விழாவைப் பற்றிய எதிரும் புதிருமான உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின.
ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான். அது ஏன்? அந்த நாளேட்டுக்கு அந்தத் தகவல் எப்படி கிடைத்தது? அதாவது, விகடன் பதிப்பகத்தில் ஒரு சிலருக்கும், 'விஓசி நிறுவனத்தில் ஓரிருவருக்கும், அடுத்து எனக்கும் மட்டுமே அப்போதைக்குத் தெரிந்திருந்த அச்செய்தி எப்படி அந்த நாளேட்டின் கவனத்துக்குப் போனது? அதிகாரப்பூர்வமாக விகடன் பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன் பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது?
கடந்த முப்பந்தைந்து ஆண்டுகளில் விடுதலைச் சிறுத்தைகளையோ, திருமாவளவனையோ ஒரு பொருட்டாகவேக் கருதாத அந்த நாளேடு, திடுமென தலைப்புச் செய்தியில் எனது பெயரைப் பதிவு செய்திருக்கிறது என்றால் அதன் உள்நோக்கம் என்ன? என்னைப் பற்றியும் விசிக பற்றியும் எதிர்மறையாக மட்டுமே செய்திகள் வெளியிடுவதைத் தனது தார்மீகக் கடமையாகக் கருதி தொடர்ந்து செயல்பட்டுவரும் அந்த நாளேட்டுக்குத் திடீரென என்மீது நல்லெண்ணக் கரிசனம் எங்கிருந்து வந்தது? அந்த நாளேட்டின் அத்தகைய செயற்பாட்டில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி' போல தெற்றெனத் தெரிகிறது.
அந்த நாளேட்டு நிறுவனத்துக்கு அப்படி என்ன உள்நோக்கம் இருக்கமுடியும்? இவ்வினா எழுவது இயல்பேயாகும். திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும். திமுகவைத் தனது அரசியல் எதிரி என வெளிப்படையாகப் பேசியும், 'திராவிட முன்மாதிரி அரசு என்பதைக் கடுமையாக விமர்சித்தும் தனது மாநாட்டில் உரையாற்றியுள்ள விஜய்யோடு உங்கள் கூட்டணியிலுள்ள திருமாவளவன் ஒரே மேடையில் ஏறப் போகிறார் பாருங்கள் என திமுக தொண்டர்களுக்குச் செய்தி சொல்வதும்:
அதனடிப்படையில் என்மீதான அரசியல் நன்மதிப்பையும், நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குவதும் தான் அந்த நாளேட்டின் நோக்கமென்பது வெள்ளிடை மலையென வெளிப்படுகிறது. அந்த நாளேட்டுக்கு அப்படியொரு உள்நோக்கம் இல்லையெனில், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? மாறுப்பட்ட கொள்கைகளும், முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே!
எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே! இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் நின்றபோதும் அந்த நாளேடு அப்படித்தான் தலைப்புச் செய்தி வெளியிட்டதா? இந்நிலையில் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு, அரசியல் உள்நோக்கம் கற்பித்து அதனைப் பூதாகரப்படுத்திய அந்த நாளேட்டின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை?
அடுத்து, இந்த விழாவில் பங்கேற்க நான் ஓராண்டுக்கு முன்னரே இசைவளித்துவிட்டேன். விஜய்யின் மாநாட்டு உரைக்கு முன்னர், அவர் வருவதை அறிந்தபோதும்கூட அந்நிகழ்வில் நான் பங்கேற்பதை பதிப்பகத்தாரிடம் உறுதி செய்துவிட்டேன். ஆனால், அவரது மாநாட்டு உரைக்குப் பின்னர், “அவர் நூல் வெளியீட்டு விழா மேடையில் என்ன பேசுவோரோ என்கிற அச்சத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினேன். அப்போது “அவர் துளியும் அரசியல் பேசமாட்டாரென” விகடன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதன்பின்னர் தான், அந்த நாளேடு இப்படியொரு தலைப்புச் செய்தியை வெளியிட்டுச் சமூக ஊடகங்களுக்குத் தீனி போட்டது. வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாக இன்று வரையிலும் பலபேர் அதனை அசைபோட்டுக் கொண்டே உள்ளனர். அந்த நாளேட்டின் உள்நோக்கம் பற்றி அலச விரும்பாமல் மிக இயல்பாக அதனைக் கடந்து போகிறவர்கள், விகடன் எடுத்த முடிவு பற்றியும் பேசாமல் மவுனித்திருப்பது ஏன்? அந்த நாளேட்டின் சதி அரசியல், தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. அவர் இனிமேல் தான் கூட்டணி அமைக்கப் போகிறார். ஆனால், விசிக ஏற்கனவே ஒரு கூட்டணியைத் தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கியிருக்கிறது.
திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையும், அதன்மூலம் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுப்பதையும் தனது முதன்மையான கடமைகளாகவும் கொண்டு செயலாற்றி வருகிறது. இந்நிலையில், அந்த நாளேட்டின் உள்நோக்கத்தையும், அத்தகைய சக்திகளின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்கும் அரசியல் நெருக்கடியை விசிக எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகியது. யார் என்ன சொன்னாலும் அதனைப் பொருட்படுத்தாமல் விஜய்யோடு மேடையேறும் துணிச்சல் திருமாவளவனுக்கு இல்லையா? அது அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டுவிழா தானே அதனை அவர் புறக்கணிக்கலாமா?
திரையுலகின் சாதனையாளராகப் புகழ்பெற்ற கவர்ச்சிமிகு கதாநாயகர் விஜய்யோடு மேடை ஏறுவதற்கு கிடைத்த ஒரு அளப்பரிய வாய்ப்பை அவர் நழுவ விடலாமா? அப்படியே ஒருவேளை அவரோடு கூட்டணி அமைத்தால்தான் என்ன தவறு ? திருமாவுக்கு காலச் சூழலுக்கேற்ப அரசியல் செய்யத் தெரியவில்லையா? வராதுபோல் வந்த மாமணி போல் ஒரு வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக்கொள்ளுமளவுக்குச் சூழலைக் கையாளத் தெரியாமல் அவர் தடுமாறுகிறாரா? திமுக அவரை அச்சுறுத்துகிறதா?
அந்த அச்சுறுத்தலுக்கு அவர் பணிந்து விட்டாரா? திமுக கூட்டணியை விட்டு வெளியேற அவரை எது தடுக்கிறது? இவ்வாறு சிலர் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் பல்வேறு ஊகங்களை, ஊடகங்களில் அள்ளி இறைத்து நம்மை வறுத்தெடுக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் யாரும் விகடன் பதிப்பகம் ஏன் ஏற்கனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்திட முடிவெடுத்தது?- என்கிற கேள்வியை எழுப்பவில்லை. விஜய் போதும் திருமா தேவையில்லை என்கிற முடிவை விகடனால் எப்படி எடுக்க முடிந்தது?அதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? என்று எவரும் அலசவில்லை.
விஜய் வருத்தப்பட்டு விடக்கூடாது; திருமா வருத்தப்பட்டாலும் வருத்தப்படட்டும் என எப்படி அவர்களால் இலகுவாக நகர முடிந்தது? என்று கேள்வி எழுப்பவும் இங்கே எவருக்கும் துணிச்சல் இல்லை. இதனை ஒரு வாதத்திற்காகத் தான் நான் முன் வைக்கிறேன். விகடன் இப்படி முடிவெடுப்பதற்கு நானும் தான் காரணம். "விஜய் வேண்டாம் அவரைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஒருபோதும் கூறமாட்டேன்: உங்களுக்கு துளியும் சங்கடத்தை உருவாக்கமாட்டேன். அவரை வைத்தே விழாவைச் சிறப்பாக நடத்துங்கள் என்று விகடன் பதிப்பகத்தாரிடம் அந்த நாளேட்டுச் செய்தியைக் கண்டதுமே நான் கூறிவிட்டேன். என்னை ஒரு சுருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?
நமக்கென்ன ஆதாயம் என்று கணக்குப் பார்க்காமல், நமது கொள்கை பகைவர்களின் சூது, சூழ்ச்சிக்குப் பலியாகி, அவர்களின் நோக்கம் நிறைவேற இடமளித்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வோடு தானே நாம் முடிவெடுக்க இயலும்! எனவே, விஜய்யை கொண்டே அவர்கள் விழா நடத்தட்டும் என்று மிகமிக தொடக்க நிலையிலேயே அவர்களிடம் எனது நிலைப்பாட்டைக் கூறிவிட்டேன். ஒருவேளை நான் அப்படி கூறாவிட்டாலும் கூட அவர்களால் இந்த முடிவைத் தான் எடுத்திருக்க இயலும். இது தான் இன்றைய சமூக அரசியலின் இயல்நிலை போக்காகும்.
“விஜய்யை தவிர்த்திட முயற்சி செய்யுங்கள்” என்று நான் கூறியிருந்தாலும், அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் மிகவும் இயல்பான உண்மை நிலையாகும். இந்நிலையில், நான் அவ்வாறு கூறியதன் அடிப்படையில் தான் அவர்களால் அந்த முடிவை குற்ற உணர்வின்றி எடுக்க முடிந்தது என்றும் நான் நம்புகிறேன். அடுத்து, 'விஜய் இந்நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியிட்ட பின்னர், அதாவது, டிசம்பர் 06 க்குப் பிறகு இதே நூலை வேறொரு நாளில் வேறொரு இடத்தில் 'அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை ஒருங்கிணையுங்கள்: அதில் நான் பங்கேற்கிறேன்" என்கிற கருத்தையும் விகடன் பதிப்பகத்திற்கு முன் வைத்தேன். அதற்கு வாய்ப்பில்லை என்பதை அப்போதே என்னால் உணரமுடிந்தது.
இந்நிலையில், நமக்கு எதிராக ஒட்டுமொத்த குற்றச்சாட்டுகளையும் மனம்போன போக்கில் வாரி வாரி வீசுபவர்கள் எப்படி நம் பக்கம் நின்று சிந்திப்பார்கள்? விஜய்யை மிகப்பெரிய சக்தியாகவும், நம்மை ஒரு "துக்கடா" வாகவும் எடைபோடுகிறவர்களால் எவ்வாறு நமக்காக வாதிட முடியும்? "தான் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை; விஜய் பங்கேற்கட்டும்" என திருமாவளவன் பெருந்தன்மையோடு ஒதுங்கியிருக்கிறார் என்று பேசுவதற்கு இங்கே யாருண்டு? "அவருக்கு நெருக்கடி வேண்டாம்; அவரைத் தவிர்க்கவும் வேண்டாம்; அவரை வைத்தே நிகழ்வை நடத்துங்கள் - என்று விஜய்கூட விகடனுக்குச் சொல்லியிருக்கலாமே "- எனப் பேசுகிற துணிச்சல் இங்கே யாருக்குண்டு?
அல்லது " திருமாவை மட்டும் வைத்து நடத்துகிறோம் என விகடனே விஜய்யிடம் சொல்லியிருந்தால், அவர் என்ன மறுதலிக்கவா போகிறார்? நான் தான் வெளியிடுவேன் என அடம் பிடிக்கவா போகிறார்? அதனை விகடன் செய்யாதது ஏன்? "- என்று வாதிடுகிற நேர்மைத் திறம் இங்கே எவருக்குண்டு?
மாறாக, முகம் சுளிக்கும் மொழியில், மூக்கைப் பிடிக்கும் நடையில், நரகல் சொற்களை நாவால் அள்ளி நம்மீதே வீசுகின்றனர். "ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறார் திருமா; அதனால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார் " என்று சொல்லுகிற அதே நபர்கள் தாம், "திமுகவுக்கு அஞ்சுகிறார் அதனால்தான் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் திருமா தவிர்த்து விட்டார் " என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகின்றனர். ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் திருமா இருப்பது உண்மையெனில், அவர் அழைத்தும்கூட ஏன் திருமா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே?
அதேபோல, திமுக அவரை அச்சுறுத்துவது உண்மையாக இருந்தால், அதற்குப் பணிந்து ஆதவ் அர்ஜூனா மீது அவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? ஆனால், அப்படியெல்லாம் அவர்களில் யாரும் இங்கே சிந்திக்கமாட்டார்கள். ‘திருமாவை யாரும் அப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியாது; அவர் சுதந்திரமாகவும் துணிவாகவும் முடிவெடுக்க கூடியவர்’ என்றெல்லாம் யாரும் இங்கே நமக்காக வாதாடவும் மாட்டார்கள்.
மாறாக, விஜயோடு நிற்பது தனக்குப் பெருமையென கருதி திருமாவளவன் மேடைக்கு வருவார் என்றும்; அல்லது தேர்தலில் போட்டியிடக் கூடுதல் இடங்கள், அதிகாரப்பகிர்வு என ஆசைப்பட்டு திருமாவளவன் விஜய்யோடு கைகோர்ப்பார் என்றும்; அல்லது அதே வேட்கையோடு திமுக கூட்டணியை விட்டு வெளியேறி அதிமுகவோடு இணைவார் என்றும் தான், அவர்கள் நம்மைப் பற்றி கணக்குப் போடுகிறார்கள். இதுதான் நம்மைப் பற்றிய அவர்களின் மதிப்பீடு!
அது நிறைவேறவில்லை என்றதும் தான், வாய்க்கு வந்தபடி அவதூறுகளை அள்ளி இறைக்கின்றனர். அவை, 'தங்களின் செயல்திட்டத்தைத் திருமாவளவன் நொறுக்கிவிட்டானே' என்று ஆதங்கப்படுவோர் அள்ளி வீசும் அமில வசவுகள், அவற்றுக்குச் செவிமடுக்க வேண்டாம். வழக்கம்போல கடந்து செல்வோம். நம்மை அச்சுறுத்துவதற்கும், நம்மை அவர்களின் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் இங்கே எவரால் முடியும்? கடந்த கால் நூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலிலும், அதற்கு முன்னர் பத்தாண்டு காலத் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் களத்திலும் எத்தனை எத்தனை அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் நாம் எதிர் கொண்டிருப்போம்?
எவ்வளவுக்கு எவ்வளவு அவதூறுகளையும், அடாப்பழிகளையும் நாம் சந்தித்திருப்போம் யாவற்றையும் பொறுத்து - அவதூறுகளைச் சகித்து - ஆதிக்கம் எதிர்த்து - அடக்குமுறைகள் தகர்த்து - சதிவலைகள் அறுத்து - சமத்துவக் களத்தில் வேரூன்றி நிலைத்து - கொள்கை பகைவீழ்த்தத் துளியும் சலிப்பின்றிச் சோர்வின்றித் துணிவுடன் போராடும் வாதாடும் - சிறுத்தைகளை விலை பேசவும்; சிறுத்தைகளுக்கு வலை வீசவும்; இங்கே ஆற்றல் எவருக்குண்டு? எவரும் உளறட்டும்! ஏளனம் பேசட்டும்! எதுவும் சொல்லட்டும்! எள்ளல் செய்யட்டும்! இழிவாய் தூற்றட்டும்!
இகழ்ந்து மகிழட்டும்! அஞ்சுவது அஞ்சல் அறிவார்த் தொழில்! அய்யன் வள்ளுவனின் அறன்விளையும் அறிவுரை! பனைமரத்தடியில் பால் அருந்தினாலும் காண்பவர் கண்களுக்கு கள்ளருந்துவதாகத் தானே தோன்றும்? அதன்படி, பொதுமக்கள் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வதே தற்போதைய நமது முதன்மையான கடமை! எனவே, யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.