H-1B விசாவில் உள்ள இந்தியர்களுக்காக அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்ததா டிசிஎஸ்?
அமெரிக்காவில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் கிளைகளில், அமெரிக்க ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி, அந்த இடங்களில் ஹெச்1-பி விசாவில் இந்தியர்களுக்கு வேலை வழங்கப்படுவதாக பணியிழந்தோர் புகார் தெரிவித்துள்ளனர்.
டாடா குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ’டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ (டிசிஎஸ்), உலகளவில் முன்னணி ஐடி நிறுவனமாக பங்களித்து வருகிறது. அமெரிக்காவின் பிரம்மாண்ட ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாகவும் டிசிஎஸ் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்கள் சிலர், இனம் மற்றும் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டி, தங்களை முறைகேடாக பணியிலிருந்து நீக்கிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காலியாகும் பணியிடங்களை ஹெச்1-பி விசாவில் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்தியர்களை பணியமர்த்துவதோடு, குறுகிய கால அறிவிப்பின் பேரில் பணிநீக்கம் செய்யப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வயது மட்டுமன்றி இனத்தின் அடிப்படையிலும் டிசிஎஸ் பாகுபாடு காட்டியதே தங்களது பணியிழப்புக்கு காரணம் என்று அமெரிக்கர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் ‘அமெரிக்க சம பணி வாய்ப்பு ஆணையத்திடம்’ முறைப்படி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், 10-க்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்களைச் சேர்ந்த 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளது. சுமார் 6 லட்சம் ஊழியர்களுடன் உலகம் முழுக்க கிளைகளைக் கொண்டிருக்கும் டிசிஎஸ் நிறுவனம், அதன் வணிகத்தில் பாதியளவுக்கு அமெரிக்காவில் ஈட்டி வருகிறது.