ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி கும்பமேளாவில் பங்கேற்றாரா?
This News Fact Checked by ‘Telugu Post’
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஜன.14-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா, பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, புனித நீராடி வருகின்றனர்.
இந்த ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் பாவெல் (61) இந்தியாவிற்கு வருகை தந்தார். கும்பமேளாவில் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தின் தீர்த்தவாரியில் புனித நீராட திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் ஒவ்வாமை பாதிப்பு இருந்ததால் புனித நீராடவில்லை என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், வெளிநாட்டு பெண்மணி ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதில், “ கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற ஆப்பிள் போன் நிறுவனரின் மனைவி ஸ்டீவ் ஜாப்ஸ் (𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀)’ கூறப்பட்டுள்ளது.
வைரல் பதிவின் இணைப்பை கீழே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு;
எக்ஸ் தளத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ராஜா என்பவரால் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் இருக்கும் வெளிநாட்டு பெண், ஸ்வீட் ஜாப்ஸ் மனைவி இல்லை என்பதை Telugu Post Fact Check குழு உறுதி செய்துள்ளது.
உலகப் பணக்காரர்களின் ஒருவரான லாரென் பாவெல், இந்தியா வந்திருந்தால் செய்தி நிறுவனங்கள் அதை பதிவு செய்திருக்கும். அதனால் இது தொடர்பான செய்திகள் ஏதும் வெளியாகியுள்ளதா என கூகுள் தேடல் வாயிலாக சோதனை செய்யப்பட்டது.
அப்போது, என்.டி.டி.வி இணையப் பக்கத்தில் “ஆப்பிள் நிறுவனர் மனைவி லாரென் பாவெல் ஜாப்ஸ், மகா கும்பமேளா 2025-இல் தான் கலந்துகொள்ள விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்” என வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது. மேலும், “சுவாமி கைலாசானந்த் கிரி அவருக்கு “கமலா” என்ற இந்து பெயரைக் கொடுத்தார். லாரென் பாவெல் ஆன்மீக நடைமுறைகளை ஏற்றுக்கொண்டார்” என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், ஜனவரி 13, 2025 அன்று இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் ஐஸ்வர்யா பாலிவால் எக்ஸ் தளப் பதிவில், “காவி நிற உடையுடன், மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் பாவெல் ஜாப்ஸ் பிரக்யராஜில் மகா கும்பமேளாவில் உள்ளார்” என்ற பதிவுடன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் லாரென் பாவெல்-இன் தெளிவான புகைப்படங்களை தேடிப் பார்க்கையில், நியூயார்க் டைம்ஸ் இணைய பக்கத்தில், ‘உலகின் 35-வது பணக்காரர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி’ எனும் தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது. இதனையடுத்து தற்போது பரப்படும் வீடியோவில் இருப்பது ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், அந்த வீடியோவில் இருப்பவர் யார் என்பதை கண்டறிய மேலும் தேடுதல் பணி தொடர்ந்தது.
அதற்காக, பகிரப்படும் வீடியோவில் இருக்கும் இன்ஸ்டாகிராமில் உள்ள ‘@Sadhviji’ எனும் கணக்கை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. மெட்டா தளத்தில் இந்த பெயரில் இருக்கும் கணக்கைத் தேடும்போது, அது ‘சாத்வி பகவதி சரஸ்வதி’ (Sadhvi Bhagawati Saraswati) என்ற புரொஃபைல் பெயரில் இருந்தது. பின்னர், கிடைத்த பெயரை வைத்து கூகுளில் தேடி பார்த்தபோது, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இவரைக் குறித்த ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், பிரயாக்ராஜில் நடந்த பரமார்த் நிகேதன் கும்பமேளா முகாமில் சாத்வி பகவதி சரஸ்வதி பூஜைகள் செய்தார் என்று கூறப்பட்டிருந்தது.
பின்னர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பதிவுகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, அவர் அந்த செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தது தொடர்பான பதிவுகள் கிடைத்தன. அது தொடர்பாக ஏ.என்.ஐ பதிவில், “சாத்வி பகவதி சரஸ்வதி முதலில் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவர் மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் ரிஷிகேஷில் உள்ள பரமார்த்த நிகேதனில் சுமார் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை சோதனை செய்தபோது, பரவிவரும் வீடியோ ‘மகா சங்கிராந்தி’ விழா அன்று எடுக்கப்பட்டது எனத் தெரியவந்தது.
அந்த வீடியோவில், “மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்! இன்று சூரியன் வடக்கு அரைக்கோளத்தில் நகரும் நாள்; அதாவது நாம் ஒளியை நோக்கி திரும்புகிறோம் என்று அர்த்தம்! மா கங்கா, மா யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமத்தில் புனித நீராடி, மகா கும்பமேளாவில் இந்த நாளைக் கொண்டாடுவது எவ்வளவு புனிதமான வாய்ப்பு,” என்று குறிப்பிட்டிருந்தார்.
முடிவு;
இதன்மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் பாவெல் ஜாப்ஸ் கும்பமேளாவில் கலந்துகொள்ள திட்டமிட்டு இருந்தார் எனவும், ஆனால் வைரல் வீடியோவில் காட்டப்படும் பெண் அவர் இல்லை என்பதும் உறுதியானது.
Note : This story was originally published by ‘Telugu Post’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.