கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் லாரன்ஸ் பிஷ்னோயை சல்மான் கான் சிறையில் சந்தித்ததாரா? - #ViralVideo | உண்மை என்ன?
This News Fact Checked by ‘Factly’
கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோயிடம் மன்னிப்பு கேட்பதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறைக்கு சென்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் (58). இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை அவர் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயத சப்ளை செய்த மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் ஹெல்ப்லைனில் கடந்த 4ம் தேதி நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர். சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும், அப்படிச் செய்யாவிட்டால் அவரைக் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரவுடி கும்பலின் மிரட்டலை தொடர்ந்து லாரன்ஸ் பிஷ்னோயிடம் மன்னிப்பு கேட்க சல்மான் கான் சிறைக்குச் சென்றார் ' என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்படுகிறது . சல்மான் கான் சிறையிலிருந்து வெளியேறுவதைக் காட்டும் யூடியூப் வீடியோ ஒன்றும் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவில் கூறப்பட்டுள்ள கூற்றின் உண்மைத்தன்மையை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் கீஃப்ரேம்களைப் பயன்படுத்தி அதனை கூகுல் ரிவர்ஸ் இமேஜ் படத் தேடலுக்கு உட்படுத்தியதில் அதன் முடிவில் ABP நியூஸ் யூடியூப் சேனல் வெளியிட்ட இந்த நீளமான வீடியோவை காண முடிந்தது. இந்த வீடியோ 7 ஏப்ரல் 2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 'ஜோத்பூர் மத்திய சிறையிலிருந்து சல்மான் கான் வெளியே வருகிறார்” என்ற தகவலுடம் வெளியிடப்பட்டது. இந்தச் செய்தியை வேறு பல ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
இந்த வீடியோவில் இடம்பெற்ற தகவல்களின்படி, மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது தெளிவாகிறது. எனவே இது சல்மான் கான் லாரன்ஸ் பிஷ்னோயை சிறையில் சந்தித்து மன்னிப்பு கேட்பது தொடர்பான வீடியோ அல்ல என்பதும் உறுதியாக தெரியவந்துள்ளது.
முடிவு :
இந்த வீடியோ ஏப்ரல் 7, 2018 அன்று சல்மான் கான் ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்து மான் வேட்டையாடிய வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகும். இதேபோல சல்மான் கான் லாரன்ஸ் பிஷ்னோயிடம் மன்னிப்பு கேட்கச் சென்றதாக நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, இடுகையில் கூறப்பட்ட கூற்று
தவறானது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.