ரஜினி ரசிகர்களுக்கு 'கூலி' விருந்து வைத்ததா, ஏமாற்றத்தை அளித்ததா? - முழுமையான ரிவியூ!
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது 'கூலி'. ரஜினிகாந்த், நாகார்ஜூனா, சௌபின் ஷாகீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?
சென்னையில் மேன்ஷன் நடத்தி வரும் முன்னாள் 'கூலி'யாக வருகிறார் ரஜினிகாந்த். தனது நண்பர் சத்யராஜின் மரண செய்தி கேட்டு விசாகப்பட்டினம் செல்கிறார். சத்யராஜ் மாரடைப்பால் இறக்கவில்லை, யாரோ அவரைக் கொன்றுள்ளனர் என்பதை அறிகிறார்.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பெரிய ஷிப்பிங் நிறுவனம் நடத்தி வரும் நாகார்ஜூனாவிடம் சத்யராஜ் வேலை செய்துள்ளார். அந்த நிறுவனத்திற்கும், சத்யராஜின் கொலைக்கும் தொடர்பு இருக்கலாமோ என ரஜினி சந்தேகிக்கிறார். சத்யராஜ் செய்து வந்த பிணங்களை எரிக்கும் வேலையை, தான் கண்டறிந்த அதிநவீன எலக்ட்ரிக் சேர் மூலம் ரஜினி செய்யத் தொடங்குகிறார். இதற்கு சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசன் உதவுகிறார்.
நாகார்ஜூனாவின் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சௌபின் ஷாகீர் யார்? அவருக்கும், ரஜினிக்கும் என்ன பிரச்சனை? சத்யராஜைக் கொன்றது யார்? நாகார்ஜூனா நிறுவனம் துறைமுகத்தில் என்ன செய்கிறது? ரஜினி அதை எப்படி கண்டுபிடிக்கிறார்? நாகார்ஜூனாவுக்கும், ரஜினிக்கும் என்ன பகை? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் படத்தின் மீதிக்கதை.
ரஜினி ஒரு முன்னாள் கூலியாக, எமோஷனல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் ஒளிர்கிறார். லோகேஷின் இயக்கத்தில், ரஜினிக்கான பன்ச் டயலாக்குகள், காமெடி, ஸ்டைல் என அவரது வழக்கமான மாஸ் விஷயங்கள் இதில் இல்லை. இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. சில பிளாஷ்பேக் காட்சிகளில் அவரது கெட்டப் சிறப்பாக இருந்தாலும், அது விரைவாக முடிந்துவிடுகிறது.
"மஞ்சும்மல் பாய்ஸ்" புகழ் சௌபின் ஷாகீர்தான் படத்தில் அதிகம் கவர்கிறார். அறிமுகக் காட்சி முதல் இறுதி வரை, தனிப்பட்ட உடல்மொழி, வசன உச்சரிப்பு என நடிப்பில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக, 'மோனிகா' பாடலில் அவரது நடனம் ரசிகர்களைக் கவர்கிறது. அவரது கதாபாத்திரத்தின் திருப்பங்கள் படத்திற்கு பலம் சேர்க்கிறது. வில்லனாக நாகார்ஜூனாவின் ஸ்டைலிஷான நடிப்பு ஓகே ரகம். ஆனால், வில்லத்தனத்தில் இன்னும் மிரட்டி இருக்கலாம். இடைவேளை காட்சியில் வரும் அவரது ஆக்ஷன் காட்சி மற்றும் வசனங்கள் மனதில் நிற்கின்றன.
ஸ்ருதிஹாசனின் ஒப்பனை இல்லாத நடிப்பு பாராட்டத்தக்கது. கிளைமாக்ஸ் காட்சிகளில் அவருக்கும் ரஜினிக்கும் இடையிலான காட்சிகள் உணர்வுபூர்வமாக உள்ளன. கன்னட நடிகர் உபேந்திரா கவுரவ வேடத்தில் வந்து சண்டைக் காட்சிகளில் ஈர்க்கிறார். ஆனால், அமீர்கான் ஒரு பெரிய தாதாவாக வந்தாலும், அவரது தோற்றமும், வசனங்களும் காமெடியாகத் தெரிகின்றன. சத்யராஜ், சார்லி, காளிவெங்கட் போன்ற பல நடிகர்கள் ஏமாற்றமளிக்கின்றனர்.
லோகேஷின் பாணியில் உருவாகும் படங்களில் இருக்கும் விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், அனல்பறக்கும் சண்டைக் காட்சிகள் 'கூலி'யில் மிஸ்ஸிங். அதேபோல, ரஜினி படங்களுக்கே உரிய கமர்ஷியல் அம்சங்களும் இல்லாதது ஒரு பெரிய பின்னடைவு.
படத்தின் நீளம் (2.50 மணி நேரம்) மற்றும் முதல்பாதி சுமாராக இருப்பது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. அனிருத்தின் இசையில் 'மோனிகா' பாடல் மற்றும் இளையராஜாவின் 'வா வா பக்கம் வா' பாடலின் ரீமிக்ஸ் பின்னணி இசை மட்டுமே ரசிக்க வைக்கிறது. மற்ற பின்னணி இசை வழக்கம்போல் உள்ளது. அதிக வன்முறை, லாஜிக்கற்ற காட்சிகள், மற்றும் ரத்தம் நிறைந்த சேசிங் காட்சிகள் ரஜினி படங்களுக்குப் புதியவை. இது ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது.
ரஜினிகாந்தின் மாஸ், ஸ்டைல் என கமர்ஷியல் அம்சங்களை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அதேபோல, லோகேஷின் 'விக்ரம்', 'கைதி' போன்ற பரபரப்பான ஆக்ஷன் படங்களை எதிர்பார்த்தாலும் ஏமாற்றம்தான். பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட் என இருந்தும், 'கூலி' திரைப்படம் ஒரு வழக்கமான பழிவாங்கல் கதையாகவே பயணிப்பது பின்னடைவு. மொத்தத்தில், ரஜினி, லோகேஷ் இருவரின் ரசிகர்களுக்கும் முழுமையான திருப்தியை இந்தப்படம் தரவில்லை.