#ILoveGaza , வெறுப்பின் கடையை விரும்புகிறேன் போன்ற வாசகங்கள் அடங்கிய டீசர்ட்டை ராகுல் காந்தி அணிந்தாரா ? - வயநாட்டில் என்ன நடந்தது ?
This News Fact Checked by ‘BOOM’
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை ஆதரித்து பிரசாரம் செய்த ராகுல் காந்தி வெறுப்பின் கடையை விரும்புகிறேன் என்றும் ஐ லவ் காஸா என்றும் எழுதப்பட்ட டீசர்ட்களை அணிந்திருந்ததாக சமூக வலைதளங்கள் போலியாக பகிரப்பட்டது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார்.இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நவம்பர் 13ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியங்கா காந்தியை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அணிந்திருந்த டீசர்ட் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த டீசர்டில் “ஐ லவ் நஃபரத் கா துகான்” என எழுதப்பட்டிருந்ததாக சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதன் பொருள் வெறுப்பின் கடையை நான் நேசிக்கிறேன் என்பதாகும். ராகுல் காந்தியின் பிரபலமான கூற்றான “வெறுப்பின் சந்தையில் அன்பின் கடை விரித்திருக்கிறேன்” என்பதற்கு மாற்றாக இவை அமைந்திருந்தது.
இதேபோல “ஐ லவ் காசா, ஐ லவ் ஆண்டி இந்தியா” போன்ற வாசகங்கள் அடங்கிய டீசர்ட் அணிந்திருந்ததாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த டீசர்ட் குறித்து உண்மைத் தன்மையை ’பூம்’ உண்மை சரிபார்ப்பு நிறுவனம் ஆய்வு செய்தது.
உண்மை சரிபார்ப்பு :
வயநாடு இடைத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நவம்பர் 11ஆம் தேதி ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ரோட் ஷோ நடத்தினர். இந்த நிலையில் வைரலான படம் குறித்து காங்கிரஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் யூடியூப் பக்கத்தில் தேடினோம். அதில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் உண்மையாகவே அணிந்திருந்த டீசர்ட் படத்தைக் காண முடிந்தது.
அதில் ராகுல் காந்தி 'ஐ லவ் வயநாடு' டி-சர்ட் அணிந்திருப்பதைக் கண்டு பிடித்தோம். காங்கிரஸின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் ஆகியவற்றில் பகிரப்பட்ட இந்த நிகழ்வின் மற்ற படங்கள் மற்றும் வீடியோக்களில் , ராகுல் காந்தி பிரியங்கா காந்தியுடன் 'ஐ லவ் வயநாடு' டி-ஷர்ட் அணிந்து பிரச்சாரம் செய்வதைக் காணலாம். எனவே இதன் மூலம் டீசர்ட் படத்தை மார்பிங் செய்து உள்நோக்கத்தோடு வெளியிட்டது உறுதியாகியுள்ளது.
முடிவு :
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை ஆதரித்து பிரசாரம் செய்த ராகுல் காந்தி வெறுப்பின் கடையை விரும்புகிறேன் என்றும் ஐ லவ் காஸா என்றும் எழுதப்பட்ட டீசர்ட்களை அணியவில்லை என்றும் மாறாக ஐ லவ் வயநாடு டீசர்ட் மட்டுமே அணிந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.