‘EVMகளை அகற்றிவிட்டு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்’ என பிரதமர் மோடி கூறினாரா?
This News Fact Checked by BOOM
பிரதமர் மோடி இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலுக்கு உபயோகப்படுத்தக் கூடாது என பொதுக்கூட்டத்தில் பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "அமெரிக்கா போன்ற படித்த நாடுகள் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கின்றன. இந்தியாவில் படிக்காதவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கின்றனர்." என இடம்பெற்றுள்ளது. பயனர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து, 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, EVMகளுக்குப் பதிலாக வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்களிப்பதை பிரதமர் மோடி ஆதரித்ததாகக் கூறுகிறார்கள்.
BOOM விசாரணையில், அந்தக் கூற்று தவறானது என கண்டறியப்பட்டுள்ளது. வைரலான கிளிப் எடிட் செய்யப்பட்டுள்ளது. வீடியோவின் சுருக்கமான பதிப்பில், பிரதமர் மோடி EVMகளைப் பயன்படுத்தி தேர்தலை நடத்தியதற்காக இந்தியாவைப் பாராட்டுகிறார். மேலும், வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்களிக்கும் நாடுகளை விமர்சித்தார்.
2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.
சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐபி சிங் இந்த வீடியோ கிளிப்பை ட்விட்டர் (எக்ஸ்) இல் பகிர்ந்து, 'நாட்டிலிருந்து EVMகளை அகற்ற வேண்டும் என்று வாதிடும் போது, மாண்புமிகு பிரதமர் மோடி ஜி இப்போது வாக்குச் சீட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு பயனர், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், EVM பயன்படுத்தும் தேர்தலை நிறுத்துவோம். மோடி EVM-ஐ எதிர்க்கிறார். வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி தேர்தல் நடத்துவதற்கு அமெரிக்காவை உதாரணமாகக் காட்டுகிறார் மோடி.’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான வீடியோ கிளிப் எடிட் செய்யப்பட்டுள்ளது.
கூகுளில் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி EVMகள் மற்றும் வாக்குச் சீட்டுகளில் பிரதமர் மோடியின் சில பேச்சுகளைத் தேடி BOOM வீடியோவைச் சரிபார்த்தது. டிசம்பர் 3, 2016 அன்று உ.பி., மொராதாபாத்தில் அவர் ஆற்றிய உரையில் இருந்து வைரலான கிளிப் என்பது கண்டறியப்பட்டது.
பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இருந்த முழு உரையை கண்டறியப்பட்டது. வைரல் வீடியோ பகுதியை 55:10 நேர பிரேமில் இருந்து பார்க்கலாம்.
இந்த உரையை முழுமையாகக் கேட்ட பிறகு, இந்தியர்களை எழுத்தறிவற்றவர்கள் என்று அழைப்பவர்களை பிரதமர் மோடி விமர்சித்தது தெரியவந்தது.
பிரதமர் மோடி பேசுகையில், “நம் நாடு ஏழை, மக்கள் படிக்காதவர்கள், மக்களுக்கு எதுவும் தெரியாது என்று சிலர் கூறுகிறார்கள். உலகின் படித்த நாடுகள் கூட இன்றும் தேர்தல் நடைபெறும் போது வாக்குச் சீட்டில் வாக்களிக்கின்றன.” என அவர் பெருமையாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி, “இது ஹிந்துஸ்தான், படிப்பறிவில்லாதவர் என்று நீங்கள் கூறும் மக்களுக்கு பட்டனை அழுத்தி வாக்களிக்கத் தெரியும், இந்திய மக்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்” என அந்த உரையில் தெரிவித்துள்ளார்.
Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.