இங்கிலாந்தை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக்கோரி முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘FACTLY’
இங்கிலாந்தை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக்கோரி அந்நாட்டில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
இங்கிலாந்து நாட்டை இஸ்லாமிய நாடாக ஆக்குவோம் என்று ஆங்கிலேய அரசை முஸ்லிம்கள் அச்சுறுத்துவதைக் காட்டுவதாகக் கூறப்படும் ஒரு போராட்டத்தை சித்தரிக்கும் வீடியோ (இங்கே, இங்கே மற்றும் இங்கே) சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வைரலான பதிவை சரிபார்க்க, இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம்கள் இங்கிலாந்தை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி இதுபோன்ற போராட்டத்திற்கு சமீபத்தில் கூடியிருக்கிறார்களா என்று தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இணையத்தில் தேடப்பட்டது. இந்த தேடல் வைரலான பதிவை சரிபார்க்க நம்பகமான செய்தி அறிக்கைகள் எதையும் தரவில்லை. இங்கிலாந்தில் இதுபோன்ற போராட்டங்கள் நடந்திருந்தால், பல முக்கிய ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும்.
வைரலான வீடியோவை உன்னிப்பாக ஆய்வு செய்ததில், அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதியைக் காட்டுவதாகக் கண்டறியப்பட்டது. வீடியோவில் காணப்பட்ட Richard Coeur de Lion அல்லது Richard the Lionheart (குதிரை மீது ஒரு போர்வீரன்) சிலையின் அடிப்படையில் இதைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இதை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொண்டு, தகுந்த முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இணையத்தில் தேடப்பட்டது. அதே போராட்டத்தின் பல வீடியோக்கள் 19 அக்டோபர் 2012 அன்று YouTube சேனலான 'takbeertv' இல் பதிவேற்றப்பட்டது கண்டறியப்பட்டது (இங்கே, இங்கே, இங்கே).
இந்த வீடியோக்களின் விளக்கத்தின்படி, ஒரு திரைப்படத்திற்கு எதிராக லண்டனில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் தொடர்பான வீடியோ. 2012-ம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஒரு வீடியோவில், வைரல் கிளிப்பில் காணப்பட்ட அதே காட்சிகளை மற்றொரு கோணத்தில் படமாக்குவதைக் காணலாம். இந்த யூடியூப் வீடியோவுடன் வைரலான வீடியோவை ஒப்பிட்டுப் பார்த்தால், வைரலான வீடியோவில் உள்ள காட்சிகளும் அதே போராட்ட நிகழ்வுடன் தொடர்புடையவை என்ற முடிவுக்கு வரலாம்.
இந்தப் போராட்டம் பற்றிய கூடுதல் தகவல்களைத் தேடும் போது, அலமி ஸ்டாக் இமேஜ் இணையதளத்தில் (இங்கே, இங்கே) இதே போராட்டத்தின் பல புகைப்படங்கள் கிடைத்தன. இந்த புகைப்படங்களின் விளக்கத்தின்படி, 6 அக்டோபர் 2012 அன்று, லண்டனில் உள்ள முஸ்லிம்கள் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே 'இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். முஹம்மது நபியைப் பற்றிய ஆட்சேபகரமான காட்சிகளைக் கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். 2012 இல் நடந்த இந்தப் போராட்டங்கள் பற்றிய கூடுதல் செய்திகளை இங்கே, இங்கே & இங்கே காணலாம்.
முடிவு:
சுருக்கமாக, 2012 இல் லண்டனில் நடந்த 'இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லீம்கள்' திரைப்படத்திற்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தின் வீடியோ, இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம்கள் சமீபத்தில் இங்கிலாந்தை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தியதாக பொய்யாகப் பகிரப்படுகிறது.
Note : This story was originally published by ‘FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.