உறவுகளின் அன்பை கடத்தியதா ‘மாமன்’?... திரை விமர்சனம் இதோ!
படத்தின் நாயகனான சூரியின் அக்கா சுவாசிகாவுக்கு 10 ஆண்டுகளுக்குபின் ஆண் குழந்தை பிறக்கிறது. மருமகனை கொண்டாடுகிறார் சூரி. பாசமழை பொழிகிறார். சில ஆண்டுகளுக்குபின் அக்காவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமியை காதல் திருமணம் செய்கிறார். பாசமாக வளர்ந்த மருமகனின் குறும்பு, அடம் காரணமாக மாமனுக்கு பிரச்னைகள் தொடங்குகிறது.
குடும்பத்தில் ஈகோ, பிரச்னை வெடிக்கிறது. சுவாசிகாவுக்கும், ஐஸ்வர்ய லட்சுமிக்கும் மனஸ்தாபம் வருகிறது. மனைவியா, மருமகனா என்ற சூழ்நிலை சூரிக்கு வருகிறது. ஒரு கட்டத்தில் மதுரைக்கு ஐஸ்வர்ய லட்சுமி டிரான்ஸ்பர் ஆக, அவருடன் செல்கிறார் சூரி. பிரிந்த மாமனும், மருமகனும் சேர்ந்தார்களா? கணவன், மனைவி சண்டை, அக்கா, தம்பி பிரச்னை முடிந்ததா என்பதை காமெடி, சென்டிமென்ட் கலந்த பக்கா குடும்ப படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்.
நம் குடும்பங்களில் பார்த்த பல பாசக்கார மாமாக்கள் போல படத்திலும் வாழ்ந்திருக்கிறார் சூரி. மருமகனை முதலில் பார்க்க வேண்டும் என்று கலங்குவதில் தொடங்கி, மருமகனுக்காக சண்டைபோடுவது, மனைவியுடன் கருத்து வேறுபாடு, அக்கா மீது பாசம், தாத்தா மீது அன்பு என பல சீன்களில் நடிப்பில் மின்னுகிறார். சில இடங்களில் கண் கலங்க வைக்கிறார். மருமகனாக நடித்த சுட்டி பையன் பிரகீத் சிவனின்( இயக்குநரின் மகன்) சுட்டி தனத்தை, அவன் அடிக்கும் லுாட்டிகளை ரசித்து எடுத்து இருக்கிறார் இயக்குநர். பர்ஸ்ட் நைட் ரூமுக்கு சென்று நான் மாமாவுடன்தான் துாங்குவேன் என தொடங்கி, பல சீன்களில் அவன் கலக்குகிறான். கிளைமாக்சில் குழந்தைகளுக்கே உரிய குணத்தில் நம்மை கவர்கிறான்.
அக்காவாக நடித்த சுவாசிகா வாழ்க்கையில் நாம் பார்த்த பல அக்காக்களை நினைவுபடுத்துகிறார். அந்த காது குத்து சீன் இருக்கிறதே சூப்பர். டாக்டராக வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும், சூரிக்கும் இடையேயான காதல், சண்டை, சமாதான சீன்கள் அவ்வளவு அழகு. இவர்களை தவிர வயதான கணவன், மனைவியாக வரும் ராஜ்கிரண், விஜிசந்திரசேகர் காட்சிகள் கவிதை மாதிரி இருக்கிறது. பாலசரவணன் அவ்வப்போது வந்து காமெடி செய்கிறார். அம்மாவாக வரும் கீதா கைலாசம், ஹீரோயின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ் நடிப்பும் அருமை. சுவாசிகா கணவராக வரும் பாபா பாஸ்கரும் சினிமாதனம் இல்லாத நல்ல நடிப்பை தந்து இருக்கிறார்.
மாமனின் பல காட்சிகள், நம் குடும்பத்தில் நடந்தவை மாதிரி தெரிவதும், நம் குடும்பத்தில் நடந்து கொண்டு இருப்பது மாதிரி புரிவதும் படத்தின் பலம். குறிப்பாக, மனைவியை சமாதானப்படுத்த சூரி கடை பிடிக்கும் டெக்னிக் செம. முதற்பாதி முழுக்க மாமன், மருமகன் லுாட்டி, காமெடி, குடும்ப பிரச்னைகள் என வேகமாக நகர்கிறது. இரண்டாம்பாதியில் பிரச்னை அதிகரிப்பது, சென்டிமென்ட், மோதல் என வேறு திசைக்கு செல்கிறது. அதில் கொஞ்சம் கத்திரி போட்டு இருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும்.
சில சீன்களில் நாடகத்தன்மை வருவதும் படத்துக்கு மைனஸ். பல இடங்களில் வரும் ஓவர் டோஸ் படத்துக்கு பலவீனம். ஆனாலும், கிளைமாக்ஸ் நச். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு திருச்சிக்கு போய் வந்த உணர்வை தருகிறது. அப்துல்வஹாப் இசை ஓகே. கூட்டுகுடும்பங்களின் மதிப்பு, அக்கா, தம்பி உறவின் அழுத்தம், மாமன், மருமகன் உறவின் பாசம், கணவன், மனைவி இடையேயான எதிர்பார்ப்புகள், பிரச்னைகள் என நம் நிஜ வாழ்க்கையில் இருந்து சீன்களை உருவாக்கி இருப்பது படத்தின் சிறப்பு.
பல சீன்களில் சிரித்து, பல சீன்களை ரசித்து, பல சீன்களின் கண்கலங்கி தியேட்டரை விட்டு வருவது நிச்சயம். படம் முடிந்தவுடன் அக்கா, மாமா, மருமகன், தாத்தா, பாட்டி, இணையர் நினைவுகள் வரும். அவர்களை பார்க்க வேண்டும். அவர்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் வரும். தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட அழகான, அருமையான, அழுத்தமான குடும்ப கதையை காமெடி, எமோஷன், சென்டிமெண்ட் கலந்து விறுவிறுப்பாக கொடுத்த இயக்குநரை, படக்குழுவை பாராட்டலாம்.
– மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்.