இளம் ஆண்களும் பெண்களும் தங்கள் உரையாடல்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறினாரா?
This News Fact Checked by ‘Telugu Post’
உலகளவில் ஊழியர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வாரத்தில் இரண்டு நாள்கள் விடுப்பு வேண்டும். அப்படி இருந்தால்தான், அவர்களால் குடும்பத்தையும், வேலையையும் சமநிலையில் அணுக முடியும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இந்த நேரத்தில் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்தால் தான் இந்தியா நம்பர் 1 இடத்திற்கு முன்னேறும் என்று தெரிவித்திருந்தார்.
பலதரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த இந்த பேச்சுக்கு, நாராயண மூர்த்தி எந்த மறுப்பும் தெரிவிக்காமல், தான் பேசியதில் அச்சாணி போல இருந்தார். இந்நிலையில், ஜனவரி 20 அன்று ஒரு நிகழ்வில் பேசிய இவர், வாரத்திற்கு 70 மணிநேரம் வேலையை யார் மீதும் திணிக்க சொல்லவில்லை; ஆனால் நிறுவன ஊழியர்கள் இதனை தேசத்தின் வளர்ச்சிக்காக செய்தால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன் என்றார்.
மும்பையில் IMC சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி ஏற்பாடு செய்த ‘இரக்கமுள்ள முதலாளித்துவம்’ என்ற தலைப்பில் கிலாசந்த் நினைவு விரிவுரையில் நாராயண மூர்த்தி பேசினார். இன்ஃபோசிஸில் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “காலை 6.30 மணிக்கு அலுவலகத்திற்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்புவேன். அது உண்மை. நான் அதை 40 ஆண்டுகளாக செய்து வருகிறேன்,” என்றார்.
இதற்கிடையில், ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. அதில், இளம் ஆண்களும், பெண்களும் தங்களின் உரையாடல்களை குறைத்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முக்கியமாக, இது முன்னணி செய்தித் தளமான ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்டது போல இருந்தது.
இணையத்தில் உலாவிவரும் அந்த ஸ்கிரீன்ஷார்ட்டின் தலைப்பில், “இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் குறைவாகப் பேசினால் வெற்றி நிச்சயம் என்பது நாராயண மூர்த்தியின் அறிவுரை,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பதியப்பட்ட கூடுதல் தகவல்களில், “தற்கால GenZ இளைஞர்கள் காதல், டேட்டிங் என பலத் தளங்களில் தங்களின் பொன்னான நேரத்தை வீணடித்து, சரிவை சந்திக்கின்றனர். இதற்கு மாறாக தேசத்தை கட்டமைக்கும் பணிகளில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்” என்று அச்சிடப்பட்டிருந்தது.
Someone stitch this Narayana Murthy 's mouth. pic.twitter.com/GFYdix1JB5
— 👑Che_ಕೃಷ್ಣ🇮🇳💛❤️ (@ChekrishnaCk) January 7, 2025
உண்மை சரிபார்ப்பு:
இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி இப்படி பேசினாரா என்பது குறித்த உண்மை சரிபார்ப்பில் பரப்படும் ஸ்கிரீன்ஷாட் போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை உறுதி செய்ய, சொல்லப்படும் கூற்றுக்கு நிகரான செய்தி வெளியாகியுள்ளதா என்பதை முதலில் கண்டறியப்பட்டது. அதற்காக, இன்போசிஸ் நாராயண மூர்த்தி, Infosys Narayana Murthy latest speech, Infosys Narayana Murthy GenZ, limited interaction between young boys and girls என பல வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள், பிங்க், யாஹூ போன்ற தேடுபொறிகளில் தேடப்பட்டது. அதில், இதுபோன்ற எந்த தகவல்களையும் செய்தி நிறுவனங்கள் வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியை வெளியிட்டுள்ளதா என்பதைப் பார்க்க ஹிந்துஸ்தான் டைம்ஸ் வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த செய்தியை தேடியபோதும், அப்படி ஒன்று இணையத்தில் பதிவாகவில்லை என்றே வந்தது. எவ்வாறாயினும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில செய்தித் தளத்தில் டிசம்பர் 16, 2024 அன்று வெளியான செய்திக் கட்டுரையை நாங்கள் பார்த்தோம். அதன் தலைப்பு “நாராயண மூர்த்தி வாரத்தில் 70 மணிநேர வேலை என்பதிலிருந்து பின்வாங்கவில்லை; இந்தியர்கள் செய்ய வேண்டியது நிறைய உள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தியில் முக்கியப் பகுதியில், “இளம் இந்தியர்களிடையே வலுவான பணி நெறிமுறையின் அவசியத்தை நாராயண மூர்த்தி வலியுறுத்துகிறார். தேசத்தின் நிலையை மேம்படுத்த 70 மணி நேர வேலை வாரத்திற்கு பரிந்துரைக்கிறார்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்து நாராயண மூர்த்தி தான் கூறிய தகவல்களில் இருந்து பின்வாங்க வில்லை என்பதும், இளைஞர்கள் இந்தியாவை நம்பர் 1 ஆக மேம்படுத்த பாடுபட வேண்டும் என்றே தெரிவித்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, குறிப்பிட்ட தளத்தின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுபோன்ற ஏதேனும் பதிவுகள் உள்ளதா என்பதை ஆராய்ந்தபோது, ஹிந்துஸ்தான் டைம்ஸ் தரப்பில் இருந்து போடப்பட்ட பதிவு ஒன்று, வைரலாகப் பகிரப்பட்டு வரும் ஸ்கிரீன்ஷாட் போலியானது என்பதை உறுதி செய்தது.
அந்த பதிவில், “இணையத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டதாகப் பகிரப்பட்டு வரும் ஒரு ஸ்கிரீன்ஷாட்டில்,
‘வாழ்க்கையில் வெற்றிபெற இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் உரையாடல்களை குறைத்துக்கொள்ள வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியான ஸ்கிரீன்ஷாட் ஆகும். மேலும், இந்த செய்தி உண்மையல்ல,” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்தின் சட்ட வல்லுநர் குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், இப்படி போலி செய்தி பரப்பியவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த பதிவில் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
🚨 Note To Readers 🚨
A screenshot of a purported HT story claiming “Narayana Murthy advocates limited interaction between young girls and boys for success” is circulating online. We confirm that the screenshot is photoshopped and the story is fake.
Our legal team is actively… pic.twitter.com/pBqVULFOpO
— Hindustan Times (@htTweets) January 7, 2025
இந்த ஆய்வில், இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, ‘இளம் ஆண்களும் பெண்களும் உரையாடல்களை குறைத்து கொள்ள வேண்டும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டது. போலியான தகவல்களை பரப்புவது சட்டத்துக்கு புறப்பானது என்பதை இணையவாசிகள் புரிந்துகொண்டு, ஒரு செய்தியைப் பகிரும் முன் அதன் முகாந்திரத்தை ஆராய்வது பிரச்னைகளை தவிர்க்கும் வழியாக இருக்கும் என அறிவுறுத்தப்படுகிறது.
Note : This story was originally published by ‘Telugu Post’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.