இறுதிப் போட்டிக்கு சென்றதா ஹைதராபாத்? சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை!
குவாலிபயர் 2 போட்டி இன்று நடைபெறும் நிலையில், ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது போன்று சென்னை சேப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2024 கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல மைதானங்களில் நடைபெற்று வந்த போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் மோத உள்ள அணிகளுள் ஒரு அணி கொல்கத்தா. மற்றொரு அணி எது என்று இன்று நடைபெற உள்ள குவாலியபயர் 2 போட்டி தான் முடிவு செய்யும்.
சென்னை சேப்பாக்கில் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறன்று கொல்கத்தாவுடன் இறுதிப்போட்டியில் களம் காணும்.
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குவாலிபயர் முடியும் முன்பே சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று, கொல்கத்தாவும், ஹைதராபாத் அணியும் களம் காண்பது போல வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.