அஜித்தின் 'விடாமுயற்சி’ - திருவினையாக்கினாரா மகிழ் திருமேனி? ஒரு பார்வை!
கணவன், மனைவியான அஜித்குமார் (அர்ஜூன்), த்ரிஷா (கயல்) அஜர்பைஜான் நாட்டில் வசித்து வருகின்றனர். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து சில கருத்துவேறுபாடு காரணமாக, தம்பதிய வாழ்க்கையில் முறிவு ஏற்படுகிறது. அதே சமயத்தில் த்ரிஷாவிற்கு வேறு ஒரு ஆணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு உண்டாகுகிறது. இருவருக்குள் ஏற்படும் பிரச்சனையை பேசி முடிவுக்கு கொண்டு வந்திடலாம் என அஜித் முயலும் போதும் கூட, த்ரிஷா பிரிவில் உறுதியாக இருக்கிறார்.
இந்த நிலையில், விவாகரத்து பெரும் வரை தனது பெற்றோர் வீட்டில் இருக்க வேண்டும், என த்ரிஷா ஆசைப்படுகிறார். பிறகு அர்ஜூன் த்ரிஷாவை காரில் ஏற்றிக் கொண்டு நெடு தூரம் பயணத்தில் இருவரும் செல்கின்றனர். சாலையின் இருபுறமும் மணல் மேடுகள், மற்றும் புழுதி நிறைந்த சாலையில் செல்லும் போது அஜித்தின் கார் ஒரு இடத்தில் பழுதடைந்து நிற்கிறது. சிக்னல் மற்றும் ஆள்நடமாட்டம் அரிதாக காணப்படும் சாலையில் தவித்து நிற்கும் அர்ஜூன், கயலுக்கும் அக்ஷன் கிங் அர்ஜூன் (ரக்ஷித்) மற்றும் ரெஜினா கஸண்ட்ரா (தீபிகா) இருவரும் உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.
நாங்கள் முன்னாள் சென்று பழுதான காரை பழுதுபார்க்க ஆட்களை அனுப்புகிறோம் என்று ரக்ஷித் கஸண்ட்ரா உறுதியளிக்க, அவர்கள் வந்த டிரக்கில் கயலை ஏற்றி விடுகிறார் அர்ஜூன். பிறகு நீண்ட நேரம் ஆகியும் உதவிக்கு யாரும் வராத நிலையில், அர்ஜூன் அவராகவே காரை பழுதுபார்த்து, காரை எடுத்துக் கொண்டு ரக்ஷித், கஸண்ட்ரா சொன்ன இடத்திற்கு செல்கிறார். அங்கு சென்று பார்க்கும் போதுதான் தெரிகிறது.
கயலை ஏற்றிக் கொண்ட வந்த டிரக் அங்கு வரவில்லையென்று, நீண்ட நேர தேடலுக்கு பிறகு அர்ஜூனுக்கு தெரிய வருகிறது தன் மனைவி கயல் கடத்தப்பட்டிருகிறார் என்று. கடத்தப்பட்ட கயலை அர்ஜூன் கண்டுப்பிடிக்கிறாரா? எப்படி கண்டுப்பிடிக்கிறார்? கடத்தலுக்கான பின்னணி என்ன? கடத்தியவர்களை அர்ஜூன் என்ன செய்தார்? என்பதெல்லாம் இரண்டாம் பாதியில் விவரிக்கிறது விடாமுயற்சி.
விடாமுயற்சி ஒரு பார்வை:
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயனகாக வலம் வருபவர் அஜித் குமார். இத்திரைப்படத்தில் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமீப காலமாகவே ஹீரோயிஸ துதிகளை தவிர்த்து வரும் அஜித் குமார், படத்தில் எங்கும் தலையிடாமல் இயக்குநரின் கைப்பொம்மையாகவே நடித்திருக்கிறார்.
அஜித்துக்கு மற்றும் த்ரிஷா கதைக்கு ஏற்றுவாறு அமைத்திருப்பது சிறப்பு. மங்காத்தாவிற்கு பிறகு ஒன்றாக திரையில் இணைந்தனர். கணவன், மனைவி கதாபாத்தரத்தை உள்வாங்கி அதை எவ்விதத்திலும் சிதைக்காமல், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதிற்கு பின்னால் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. மாஸ் ஹீரோ கிடைத்துவிட்டால், ஹீரோவின் மார்க்கெட்டிற்கு ஏற்றவாறு திரைப்படத்தை எடுக்கும் சமயத்தில் கதைக்கு மற்றும் முக்கியத்தும் கொடுத்து கதைக்கு கதாநாயகனை மெழுகுப்படுத்தி, புதிய இலக்கணத்தை மகிழ் திருமேனி உருவாகியிருக்கிறார்.
முதல் பாதி விறுவிறுப்பாக சென்று நிறைவடைந்தாலும், இரண்டாம் பாதியில் நூல் அறுப்பட்டு காற்றில் பறக்கும் பட்டத்தைப் போல் சில காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கின்றன. வில்லன் கதாபாத்திரங்களில் வரும் அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோரின் பின்புலங்களை தெளிவாக காட்சிப்படுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மனநிலைப்பாதிக்கப்பட்டவர்கள், இவ்வளவு துணிகரமான குற்றச்செயலில் ஈடுபடுவதை காவல்துறை கண்டுக்காததது நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை. தனிமனிதாக தன்னுடைய மனைவியை கண்டுபிடிக்க போராடும் அஜித், ஒரே உணர்ச்சியுடன், முகத்தில் எவ்வித பதற்றம், பயம், ஆராவாரம் இல்லாமல் நடித்தது, எப்படியும் அஜித் ஹீரோயினை கண்டுபிடித்து விடுவார் என்ற அசட்டுத் தன்மையை உண்டாக்குகிறது.
இத்திரைப்படத்தின் இரண்டாவது கதாநாயகன் இசையமைப்பாளர் அனிருத். படமுழுக்க சிறப்பான பின்னணி இசையால் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். விறுவிறுப்பான காட்சிகளில் அவரின் துள்ளலான பின்னணி இசை அவ்வப்போது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம். அஜித், த்ரிஷாவை அழகாக காட்சிப்படுத்தியும், ஸ்டண்ட் காட்சிகளில் ஹாலிவுட் அளவிற்கு காட்சிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு காட்சிகளை வேகமாக நகர்த்த உதவுகிறது. இறுதியாக, முதல் பாதிக்கு அளித்த முக்கியத்துவத்தை, இரண்டாம் பாதிக்கும் கொடுத்திருந்தால் சுவாரசியம் இருக்கும்.
- சு. காட்சன் கிருபாகரன்