தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் என பள்ளி சிறுமி கோரிக்கை வைத்தாரா? - உண்மை என்ன?
This News Fact Checked by 'TELUGU POST '
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை மற்றும் தேசியக் கல்விக்கொள்கை (NEP) செயல்படுத்தப்படுவதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மற்றும் மத்திய அரசு இடையே கடும் வார்த்தை மோதல் நிலவி வருகிறது
இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதமைச்சர் மு.க.ஸ்டாலின் “அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்” என்று கூறினார். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “தேன்கூட்டில் கல் எறிய வேண்டாம்” என மத்திய அரசை எச்சரித்தார். இது மும்மொழிக் கொள்கை பற்றிய வார்த்தை மோதலை தீவிரப்படுத்தியது.
மேலும் மும்மொழி தொடர்பான விவாதத்தில், மக்கள் நீதி மையம் (MNM) கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழர்களின் மொழிப் பெருமையை வலியுறுத்தி, “தமிழர்கள் தாய் மொழிக்காகவே உயிரிழந்திருக்கிறார்கள்” எனக் கூறினார். தமிழை பிரதான மொழியாகக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மற்றொரு மொழியை கட்டாயமாக்கும் முயற்சி தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான கடுமையான இந்த வார்த்தை மோதலுக்கு மத்தியில், அரசுப் பள்ளி சிறுமி ஒருவர் சிலேட்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு செய்தியுடன் இருக்கின்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. சிறுமி வைத்திருந்த சிலேட்டில், “திராவிடமாடல் அரசே... அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை கற்றுக்கொடுக்கும் தனியார் கல்வி நிலையங்களை இழுத்து மூடு!! பாமரனுக்கு கிடைக்காத கல்வி யாருக்கும் வேண்டாம்!!!!” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. மற்றொரு எக்ஸ் தளப் பயனர் ஒருவர் அதே வார்த்தைகளை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவுகளை இங்கேயும், இங்கேயும் காணலாம்.
உண்மை சரிப்பார்ப்பு :
இந்த தகவலை தெலுங்குபோஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு ஆய்வு செய்தபோது , இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி திமுக அரசின் கல்விக்கொள்கையை விமர்சித்ததாக வரும் தகவல் தவறானது என கண்டறிந்துள்ளது.
அந்த ஆய்வில், புகைப்படத்தில் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ள தமிழ்ப் பாடத்தை நுணுக்கமாக முதலில் ஆராய்ந்துள்ளனர் . அப்போது அது கணினி மூலம் சேர்க்கப்பட்ட மிருதுவான, ஒழுங்கான விளிம்புகளைக் கொண்டிருந்தது. இயற்கையாக சாக் பீஸ் கொண்டு எழுதப்பட்ட எழுத்துக்கள் பிளவு, முறிவு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
நீங்கள் வைரல் புகைப்படத்தையும், இயற்கையாக எழுதுப்பொருள் கொண்டு எழுதப்பட்ட சிலேட்டையும் ஒப்பிடலாம்.
மேலும் இந்த செய்தியை, Bing Image Tool மூலம் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதே புகைப்படம் iStockPhoto உள்ளிட்ட தொகுப்புசார் புகைப்பட (Stock Photo) வலைத்தளங்களில் தமிழ் எழுத்துகளின்றி காணப்பட்டுள்ளது. இதே புகைப்படம் பிற புகைப்படத் தொகுப்பு தளங்களிலும் இருந்துள்ளது.
இதனை ஒப்பீட்டு பார்க்கலாம்
இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையை விமர்சித்ததாக எந்த ஆதாரமும் இல்லை. தமிழில் எழுதப்பட்ட வார்த்தைகள் கணினி மூலம் சேர்க்கப்பட்டதாகும். அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாணவி முன்வைத்ததாக உருவாக்கப்பட்ட போலித் தகவல் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டுள்ளது. அதனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது. தமிழில் எழுதிய சிலேட்டை வைத்திருக்கும் சிறுமியின் புகைப்படம், தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வீடியோ வடிவில் காண
This story was originally published by 'TELUGU POST ' and Republiced by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.