For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகரை நெகிழ வைத்த தோனி! நடந்தது என்ன?

09:28 PM May 30, 2024 IST | Web Editor
ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகரை நெகிழ வைத்த தோனி  நடந்தது என்ன
Advertisement

தோனியை பார்க்க போட்டியின் போது மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகரிடம், உனக்கு ஏன் மூச்சுவாங்குகிறது என்று கேட்டு அறுவைசிகிச்சைக்கு நான் பொறுப்பு என்று தோனி கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் பல போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தாலும் ரசிகர்களின் பாசம் மட்டும் இறுதி லீக் போட்டிவரை குறையாமலே இருந்தது. அது சென்னையாக இருந்தாலும் சரி வெளி மைதானமாக இருந்தாலும் சரி மஞ்சள் நிறத்தால் மைதானங்களை நிரப்பிய ரசிகர்களில் கூட்டம், பல வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மஞ்சள் நிறத்தால் இந்தியாவின் அனைத்து மைதானங்களையும் ஆக்கிரமித்த இந்த பட்டாளம் பல கிலோமீட்டர் தூரம் கடந்து வந்தது தோனி என்னும் ஒற்றை மனிதருக்காக மட்டும் தான். ஆம், தோனியின் முகத்தை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் மைதானங்களை நோக்கி படையெடுத்தார்கள். அதனால் தான் தோனியும் ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாகவே இருந்துவருகிறார்.

பொதுவாக தோனி பேட்டிங் செய்யும் போதோ அல்லது விக்கெட் கீப்பிங் செய்யும் போதோ, சில ரசிகர்கள் தடுப்பை மீறிவந்து அவரை பார்க்கவும் பேசவும் ஓடிவருவது வழக்கம். அப்படி வரும்போது தோனியும் அவர்களின் கைகளுக்கு சிக்காமல் ஓடிஒளிந்து வேடிக்கை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி ரசிகர்களுடன் விளையாடுவது அவருக்கு பிடித்தமான விசயமாகவும் இருக்கிறது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் GT vs CSK அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின. அப்போது தோனி பேட்டிங் செய்த போது, தோனியின் தீவிரமான ரசிகர் ஒருவர் காவலர்களை தாண்டி மைதானத்திற்குள்ளே நுழைந்தார். தூரத்தில் ரசிகர் தன்னை நோக்கி ஓடி வருவதை பார்த்த தோனி அவரும் தப்பிப்பது போல் சிறிது தூரம் ஜாலியாக ஓடினார்.

பின்னர் அந்த ரசிகர் தோனி காலில் விழுந்து வணங்கி, தோனியை கட்டிபிடித்துக்கொண்டார். அப்போது அந்த ரசிகரை சற்று நேரம் ஆசுவாசப்படுத்திய தோனி, அவரிடம் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார். பின்னர் காவலர்கள் வந்து அவரை பிடித்து செல்ல, அப்போது அவரிடம் கடினமாக நடந்துகொள்ளாதீர்கள் என கோரிக்கை வைத்தார். அதனால், பொறுமையாக அந்த ரசிகரை காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

மைதானத்தில் நுழைந்த போது தோனியிடம் என்ன பேசிக்கொண்டிருந்தேன் என்பது குறித்து சமீபத்தில் பேசியிருக்கும் அந்த தோனியின் ரசிகர், தனக்கிருக்கும் மூச்சுத்திணறல் பிரச்னையை கண்டுபிடித்து தோனி பேசிய நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் அவர், மைதானத்திற்குள் நுழைந்து தோனியை பார்த்ததும், நான் சரணடைய முயற்சித்தேன். மகிழ்ச்சியில் கையை உயர்த்தி அவரைத் துரத்தினேன். அப்போது மஹி பாய், 'நான் உன்னிடம் சிக்காமல் ஓடி ஃபன் செய்யப்போகிறேன்” என்று கூறியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பின்னர் தான் அதிகமாக மூச்சுத்திணறுவதை பார்த்த தோனி தனக்கிருக்கும் மெடிக்கல் பிரச்னையை கண்டுபிடித்ததாக கூறும் அவர், “நான் பைத்தியமாகவே மாறினேன், அவருடைய பாதங்களைத் தொட்டேன், அவர் ஒரு ஜாம்பவான். என் கண்களில் தானாகவே கண்ணீர் வந்தது, அப்போது தான் அவர் என்னிடம் இருக்கும் மெடிக்கல் பிரச்னையை அடையாளம் கண்டுகொண்டார்”. அவர் என்னிடம்,“நீ ஏன் அதிகமாக மூச்சுவிடுகிறாய்” என்று கேட்டார். நான் அவரிடம் எனக்கிருக்கும் மூச்சுத்திணறல் பிரச்னை குறித்து கூறினேன்.

அப்போது மஹி பாய் என்னிடம், “உனக்கு எந்த பிரச்சனையும் வராது. உன் அறுவை சிகிச்சையை நான் பார்த்துக்கொள்கிறேன். கவலைப்படாதே. இவர்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள்” என்று கூறினார். அவர் அப்படி கூறியதை கேட்டதும், என் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்துகொண்டே இருந்தது. இதனால்தான் மக்கள் மஹி பாயை ”தல” என்று அழைக்கிறார்கள்” என தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags :
Advertisement