தோனி என்ட்ரி- வார்னிங் கொடுத்த ஸ்மார்ட் வாட்ச் | வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ஆர்ப்பரித்த ரசிகர்களால் ஸ்மார்ட் வாட்ச்சில் பதிவான எச்சரிக்கையை இன்ஸ்டா ஸ்டோரியில் லக்னோ வீரர் குயிண்டன் டி காக்கின் மனைவி ஷாஷா பகிர்ந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எந்த மைதானத்தில் விளையாடினாலும், அது சேப்பாக்கம் மைதானம் போல மகேந்திர சிங் தோனியால் மாறிவிடுகிறது. அவர் பேட்டிங் செய்ய எத்தனை பந்துகள் மீதம் இருந்து வந்தாலும், மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கிறது. நேற்று அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை குயிண்டன் டி காக் மனைவி பதிவு செய்திருக்கிறார். நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காமல் ஏமாற்றம் தந்தார்கள். பேட்டிங் வரிசையில் நான்காவதாக அனுப்பப்பட்ட ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 57 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார்.
மேலும் ரவி பிஸ்னாய் வீசிய ஆட்டத்தின் 18 வது ஓவரில் மொயின் அலி ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்த போட்டியில் கொஞ்சம் முன்கூட்டியே தோனி விளையாடுவதற்கு மைதானத்திற்குள் வந்தார். அவர் பேட்டிங் செய்ய வருகின்ற பொழுது எல்லா மைதானங்களிலும் காதுகளால் உள்வாங்க முடியாத அளவுக்கு சத்தம் ரசிகர்களால் எழுகிறது.
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி லக்னோ அணிக்கு எதிராக விளையாடுகின்ற காரணத்தினால், அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் அவரின் மனைவியும் போட்டியை பார்க்க மைதானத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது ஆட்டத்தின் முதல் பகுதியில் தோனி பேட்டிங் செய்ய வந்த பொழுது ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானம் அதிர்ந்தது.
இந்த நிலையில் போட்டியை மைதானத்தில் அமர்ந்து பார்த்த குயின்டன் டி காக் மனைவியின் கைகளில் கட்டி இருந்த வாட்ச் காதுகளால் கேட்க முடியாத அதிக சத்தம் சுற்றுப்புறத்தில் இருப்பதாக எச்சரிக்கை செய்து அலறியது. மேலும் அந்த வாட்ச் மைதானத்தில் அந்த நேரத்தில் 95 டெசிபல் சத்தம் இருப்பதாகவும், அந்த சத்தத்தை தொடர்ந்து பத்து நிமிடங்கள் கேட்டால் காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்தும் இருக்கும் என எச்சரிக்கை செய்தது.
இதை குயிண்டன் டி காக் மனைவி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தற்பொழுது இது தோனியின் ரசிகர்களால் பெரிய அளவில் சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரும் மகேந்திர சிங் தோனியை சுற்றியே அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.