#Hogenakkal | நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு - அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 18,000 கனடியாக இருந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை அதிகரித்துள்ளது. நேற்று மாலை 18, 000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 20, 000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், மழையால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : மக்களே…! அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - #IMD அறிவிப்பு!
காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்களுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் 10-வது நாளாக தடையை மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளது.