தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நீக்கம்!
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக செயல்பட்டு வந்தவர் தர்மசெல்வன். இவர் கடந்த சில நாட்களுக்குமுன் தருமபுரியில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய தர்மசெல்வன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. என யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என பேசினார். அவரது பேச்சு தொடர்பான காணொலி சமூகவலைதளத்தில் வைரலானது. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரை மிரட்டும் வகையில் திமுக பொறுப்பாளர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.தர்மசெல்வனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ஆ. மணி, பி.காம்., பி.எல்., எம்.பி., (பிரகி நிவாஸ், 84/ஏ-1, சேலம் மெயின் ரோடு, பாரதிபுரம், தருமபுரி 636 705) தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.