நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கு - ஏப்ரல் 9ல் இறுதி விசாரணை!
கேரளாவில் பிறந்து தமிழ்மொழி வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து நாடு முழுவதும் பிரபலமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி கடந்த நவ.18ம் தேதி ‘நயன்தாரா – Beyond The Fairy Tale’ என்ற தலைப்பில் அவரது திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில், நயன்தாராவின் காதல் வாழ்க்கை, தனிப்பட்ட நிகழ்வுகள், அன்பு நிறைந்த திருமண தருணங்கள் மற்றும் விக்னேஷ் சிவனுடனான அவரது வாழ்க்கையைப் பற்றி விரிவாக காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான இதன் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவுக்கு எதிராக ‘நானும் ரவுடிதான்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தொடர்ந்து, நடிகர் தனுசுக்கு எதிரான அறிக்கை ஒன்று நயன்தாரா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது திரையுலம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரூ.10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.