டிஜிட்டல் தளத்தில் உலகளவில் சாதனை படைக்கும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'...
நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9க்கு மேற்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.
கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ். இயக்குனர் அருண் மாதேஸ்வரன், ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கியுள்ளார்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தள்ளது. இப்படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானது. மேலும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆக்ஷன் பாணியில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ.105 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிப். 9-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. வெளியான முதல் வாரத்திலேயே, உலகம் முழுக்க 14 நாடுகளில் டாப் 5 வரிசையில் இப்படம் இடம்பிடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தியா உள்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி 40 நாட்களை கடந்த நிலையில், இன்றளவிலும் இந்தியா மட்டுமல்லாது, தான்சேனியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளிலும், பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், போன்ற நாடுகளிலும் தொடர்ந்து முதல் 5 இடங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
கடந்த 8-ம் தேதி வெளியான இப்படத்தின் இந்தி பதிப்பு, பல்வேறு புலம்பெயர் நாடுகளில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்த நிலையில், இந்தியாவில் முதல் 10 இடங்களுக்குள் முதல் படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் தொடர்ந்து 2 வாரமாக, இப்படம் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை எந்தவொரு இந்தியத் திரைப்படமும் செய்யாத புதிய சாதனை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக இளையராஜா பயோப்பிக்கில் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.