டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடக்கம் - அதிகாரியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!
மக்களவைத் தேர்தலையொட்டி டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரிவு அதிகாரியாக ஏடிஜிபியான மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் ; “எங்களை மன்னித்து விடுங்கள்…” இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருது பதக்கத்தை தொங்கவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!
இந்நிலையில், இதையடுத்து, காவல்துறையும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர்கள் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை இடமாற்றம் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை காவல்துறையில் 90 சதவீத இடமாற்ற பணிகள் முடிந்துள்ளன.
தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுக்கான பொறுப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவில் 30 போலீசார் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குசாவடிகள் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தோடு இணைந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் எத்தனை வாக்குசாவடிகள் இருந்தன? இந்தாண்டு எத்தனை வாக்குசாவடிகள் இருக்கும்? என்பது தொடர்பான ஆய்வு தேர்தல் பிரிவு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்ப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.