காலணியுடன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள்... திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள திருமலை கோயிலில், இரண்டு பக்தர்கள் காலில் செருப்புடன் கோயிலின் பிரதான நுழைவாயிலுக்கு நடந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று (ஏப்.12) மதியம் பக்தர்கள் மூன்று பேர் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் டிஸ்போசபில் செருப்புகளை அணிந்து வைகுண்டம் காத்திருப்பு மண்டபம் வழியாக ஏழுமலையானை வழிபட சென்று கொண்டிருந்தனர்.
துணியால் தயார் செய்யப்பட்டு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஸ்போசபில் செருப்புகளை அவர்கள் அணிந்திருந்தனர். வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் பணியில் இருக்கும் தேவஸ்தான ஊழியர்கள்,
தேவஸ்தான விஜிலென்ஸ் துறை ஊழியர்கள், பக்தர்களை சோதனை செய்யும் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் அந்த பக்தர்களின் காலில் செருப்பு இருப்பதை கவனிக்கவில்லை.
இதனால் அந்த பக்தர்கள் ஏழுமலையான் கோயில் முன் வாசல் வரை செருப்பு அணிந்து வந்துவிட்டனர். கோயிலின் பிரதான வாயிலில் அவர்கள் நுழைய ஓரிரு வினாடிகள் மட்டுமே நேரமிருந்த நிலையில், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பக்தர்களின் காலில் செருப்பு இருப்பதை கவனித்து அவர்களை தடுத்து நிறுத்தி செருப்பை கழற்ற செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த பக்தர்கள் சாமி கும்பிட அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்திய தேவஸ்தான உயர் அதிகாரிகள், பணியில் அலட்சியமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் அந்த நேரத்தில் பணியில் இருந்த தேவஸ்தான ஊழியர்கள் இரண்டு பேர், தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் ஐந்து பேர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்யும் பணியில் அப்போது ஈடுபட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்ய தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், ஆந்திர போலீஸ் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் பரிந்துரை செய்திருக்கிறார்.
இதனிடையே இச்சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSRCP கண்டனம் தெரிவித்துள்ளது.