சித்ரா பௌர்ணமி அன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் - சென்னை நாட்டிய குழுவினர் பரதநாட்டியம் ஆடி அசத்தல்!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சென்னை நாட்டிய குழுவினர் சூரசம்ஹார திடலில் நிலவொளியில் பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில், கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதால் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று இந்த கடற்கரையில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து மறுநாள் காலையில் தூங்கி எழுந்து நாழி கிணற்றிலும், கடலிலும் புனித நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பினால் வாழ்க்கையில் உடல் அளவிலும் மன அளவிலும் பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அதன்படி நேற்று (ஏப். 23) நள்ளிரவு சித்திரை மாதத்தில் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி தினத்தையொட்டி தமிழ்நாட்டில் சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலை முதலே கோயில் கடற்கரை பகுதியில் குவியத் துவங்கினர். பக்தர்கள் வரத்து அதிகமான காரணத்தினால் கோயில் கடற்கரை மட்டுமல்லாது வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி சூரசம்ஹார திடலில் நடைபெற்றது. சித்ரா பௌர்ணமி தினத்தில் கடற்கரையில் நிலவு பின் நிற்க முன் நின்று மாணவிகள் ஆடி அசத்திய பரதநாட்டிய நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.