ஆடி அமாவாசை : சதுரகிரியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!
சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை ஆகியவை 3 அமாவாசைகளை முக்கிய அமாவாசை தினங்களாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், ஆடி அமாவாசை தினமான இன்று (ஆக. 4) முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் நீர்நிலைகளில் குவிந்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலை மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வாகனங்கள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தாணிப்பாறை விளக்கு பகுதியில் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அங்கிருந்து நடந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆடி அமாவாசை பாதுகாப்பு பணியில் விருதுநகர் மதுரை மாவட்ட போலீசார், வனத்துறையினர் மற்றும் தீயனைப்புத்துறையினர் என 2500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர்?
மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 60க்கும் மேற்பட்டோர் ஆற்றுப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் அடிவாரப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் வருகையை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.