சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் ஏற்பட்டத்தால், நீண்ட வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் நிறைவுப் பெற்று நடை மூடப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்பட்டது.
ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். தொடர்ந்து ஜனவரி 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெற உள்ளது.
இதையும் படியுங்கள் : கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? - டெல்லி முதலமைச்சர் வீட்டின்முன் போலீசார் குவிப்பு..!
இந்நிலையில், நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் 1 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 16 முதல் 20 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியோர் வருகை அதிகரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தரிசனம் முடிந்து உடனடியாக மலையிறங்க வேண்டும் என்றும் அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.