சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள வழுக்குப் பாறை , மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்: பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடிய மலைவாழ் மக்கள்!
ஏற்கெனவே பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல கடந்த 10 -ம் தேதி முதல் 14-ம் வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர் கனமழை காரணமாக கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
இருப்பினும் அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.