சட்டசபையில் தவாக தலைவர் வேல்முருகன் பேச்சு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துறை சார்ந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அவையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் வேல்முருகன், சாதிவாரி கணக்கெடுப்புக்கு மாநில அரசு நடத்தக் கூடாது என எந்த சுப்ரீம்கோர்ட்டும் தெரிவிக்கவில்லை என்றார். அத்துடன் இடஒதுக்கீடு தொடர்பான சில கருத்துகளை முன்வைத்தார். மேலும் அவர் இருக்கையை விட்டு எழுந்து அமைச்சர்களை நோக்கி கைகளை நீட்டி பேசினார். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வேல்முருகனின் செயல்பாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவையில் அவர் பேசியபோது, “தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார். இது வேதனை அளிக்கிறது. அவை மாண்பை மீறி வேல்முருகன் நடந்து கொள்ளக் கூடாது. இருக்கையை விட்டு வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல. இதனால் வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டசபை உறுப்பினர் வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இனி இப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.