For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க வேண்டும்” - எஸ்.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

12:44 PM Mar 11, 2024 IST | Jeni
“நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க வேண்டும்”   எஸ் பி ஐ  மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

நாளைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி வழங்க வேண்டும் என்றும், மார்ச் 15-ம் தேதி அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சந்திரசூட்,  நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,  பி.ஆர்.கவாய்,  ஜெ.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று நடைபெற்றது.

அப்போது,  தேர்தல் பத்திர விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில்,  அவை ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அவற்றை சேகரிப்பதில் சற்று பிரச்னைகள் இருப்பதாகவும் எஸ்.பி.ஐ. வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மிக எளிமையான ஒரு உத்தரவை தான் எஸ்.பி.ஐ. வங்கிக்கு கொடுத்தோம் எனவும்,  அதனை பின்பற்றுவதற்கு கால அவகாசம் கேட்பதை எப்படி ஏற்றுக்கொள்வது என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

நடைமுறை சிக்கல்களால் நன்கொடையாளர்கள் குறித்த தகவல்களை தாக்கல் செய்வதில் கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும்,  தனித்தனி விவரம் எடுப்பதற்காக அவகாசம் கோருவதாகவும் எஸ்.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது.  அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும்,  அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.  அப்படி இருக்கும் பொழுது அதன் தகவல்களை கொடுப்பதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது? அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவரங்கள் மிக சுலபமாக சேகரிக்கக் கூடியது.  அதை வெளியிட எஸ்பிஐ ஏன் கால அவகாசம் கேட்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த எஸ்.பி.ஐ.  வங்கி, “தனித்தனி விவரம்,  எவ்வாறு வாங்கப்பட்டது என ஒவ்வொரு தரவும் தனித்தனியாக வழங்க வேண்டியுள்ளதால் கால அவகாசம் வேண்டும். மேலும்,  இந்த விவகாரத்தில் தரவுகளை வழங்கும்போது ஏதாவது தவறு ஏற்பட்டால்,  அது மேலும் பல சிக்கலை ஏற்படுத்தும்” என்றும் தெரிவித்தது.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள்,  “24-க்கும் குறைவான அரசியல் கட்சிகள் தான், தேர்தல் பத்திரங்களின் மூலமாக நன்கொடை பெற்றுள்ளன.  அதன் தகவல்களை சேகரிப்பது சுலபமானது தானே?. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் மற்றும் அந்த அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தொடர்பு பற்றி நாங்கள் எதுவும் கேட்கவில்லையே. 22,472 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என கடந்த 2019 ஆம் ஆண்டு கூறப்பட்டுள்ளது.  அதன் பின்னர் சமீபத்திய தரப்புகள் படி 44,434 பத்திரங்கள் பெறப்பட்டுள்ளது என வங்கி கூறியுள்ளது.  வாங்கப்பட்டுள்ள தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தான் கேட்கிறோம்.  அதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து தரவுகளும் மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள போது, அ ந்தத் தகவல்களை தாக்கல் செய்யதான் உத்தரவிட்டுள்ளோம். நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டியது தானே” என்று தெரிவித்தனர்.

பின்னர் பேசிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா,  “சீலிட்ட கவரில் வைக்கப்பட்டுள்ள தரவுகளை எஸ்.பி.ஐ. தாக்கல் செய்திருக்க வேண்டும்.  யார் தேர்தல் பத்திரத்தை வாங்கியுளார்கள், எந்தெந்த கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என அதில் உள்ளது அல்லவா. இந்த நபர் இந்த கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியுள்ளார் என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்,  “கடந்த 26 நாட்களில் இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்தது ஏன்? தாக்கல் செய்துள்ள பதிலில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தரவுகளை சரி பார்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த எந்த விஷயமும் குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்தார்.  “இதுவரை 10,000 தேர்தல் பத்திரங்கள் முடித்தோம்,  அதற்கு கூடுதலாக சரிபார்த்துள்ளோம் என எந்த விவரத்தையும் வங்கி இதுவரை கூறவில்லை” என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறினார்.

நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த எஸ்.பி.ஐ. வங்கி,  “தரவுகள் சரிபார்க்கப்படும் போது ஒருவேளை தவறாக இணைக்கப்பட்டு வழங்கப்பட்டால்,  நன்கொடையாளர்கள் வங்கியின் மீது மானநஷ்டஈடு வழக்கு தொடர்வார்கள்.  இது வங்கியின் நற்பெயரை கடுக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தது.

“நாட்டில் தேர்தல் பத்திரங்களை கையாண்ட ஒரே ஒரு வங்கி உங்கள் வாங்கிதான்.  எனவே இந்த வேலையை செய்கிறபோது அதை நீங்கள் சரிவர செய்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தரவுகள் தாக்கல் செய்யப்படும் போது, நன்கொடையாளர்கள் வங்கிக்கு எதிராக புகார் அளிப்பார்கள் என்பது ஏற்புடையது அல்ல” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

“தேர்தல் பத்திர விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிறது.  இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?  எஸ்.பி.ஐ. வங்கியால் செய்ய முடியாத வேலை எதையும் நாங்கள் கொடுக்கவில்லை.  ஏற்கனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம்.  அப்படியெனில் அந்த வேலையை செய்து முடிக்க தற்போது கால அவகாசம் கேட்பது ஏன்?”  என மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.  “உச்சநீதிமன்ற உத்தரவின் சில பகுதிகளை திருத்தம் செய்தால்,  மூன்று வாரங்களுக்குள் விவரங்களை தாக்கல் செய்ய இயலும்” என்று எஸ்.பி.ஐ. வங்கி தரப்பு தெரிவித்தது.எஸ்.பி.ஐ.-ன் வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி கால அவகாசம் கோரி, எஸ்.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  மேலும், “தேர்தல் பத்திர முறை என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால்,  அதனை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.  மேலும் அரசியல் கட்சிகள் வரைமுறை இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவது என்பது தன்னிச்சையானதோடு மட்டுமல்லாமல்,  அரசியல் சாசன பிரிவு 14ஐ மீறும் வகையில் உள்ளது என்பதும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் தான் எஸ்.பி.ஐ. வங்கிக்கு தேர்தல் பத்திர விவகாரங்களில் அதன் விவரங்களை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  குறிப்பாக, என்ன தேதியில் தேர்தல் பத்திரம் யார் வாங்கியது,  எந்த கட்சியிடம் கொடுத்தார்கள்,  என்ன மதிப்பில் அதை கொடுத்தார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இவ்வாறு பல விவரங்களை கொடுக்க கூறியதால்,  அதனை வழங்க கூடுதல் அவகாசம் வேண்டும் என தற்போது எஸ்.பி.ஐ. வங்கி அவகாசம் கோரியுள்ளது.  அதே சமயம், ஏன் கூடுதல் கால அவகாசம் கோரப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.  குறிப்பாக தகவல்கள் சரிபார்க்க நேரம் எடுக்கும்.  சில தகவல்கள் எலக்ட்ரானிக் வடிவத்தில் இல்லை எனவும் எஸ்.பி.ஐ. கூறியுள்ளது.  குறிப்பிட்ட தகவல்களை வெளியிட வேண்டும் என சட்டப்படி நீதிமன்றம் கேட்கும்பொழுது, அதை எஸ்.பி.ஐ. வெளியிடத்தான் வேண்டும்.

பல்வேறு நிலைகளில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் சீலிடப்பட்ட கவரில்,  மும்பை தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.  அதில் வாங்கப்பட்ட பத்திரங்கள் மற்றும் பணமாக்கப்பட்ட பத்திரங்கள் ஆகியவற்றை சரிபார்ப்பது சற்று காலம் எடுக்கும் செயல் என வங்கி கூறியுள்ளது.  இருப்பினும், தேர்தல் பத்திரங்கள் யாருக்கு எந்த அரசியல் கட்சிக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எளிதாக சேகரிக்க கூடியது தான்.

நாளைக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.பி.ஐ. வழங்க வேண்டும்.  அந்த விவரங்களை 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.  கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த தவறினால்,  எஸ்.பி.ஐ. அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உத்தரவிட்டார்.

Tags :
Advertisement