ரூ.300-க்காக ஏமார்ந்த மக்கள்...மதுக்கடை கோரிக்கையில் அம்பலமான உண்மை! நடந்தது என்ன?
மதுக்கடை கோரி நேற்று 7 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், இதற்கு பின் அரசியல் சதி இருப்பது தெரியவந்துள்ளது.
எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுங்கள் எனக் கோரிக்கை வைக்கும் மக்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் எங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டும் என 7 கிராம மக்களே ஒன்று திரண்டது சக மக்களிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஞ்சே அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட
நலப்பரம் பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராமத்து மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கிராமத்தின் அருகேயே டாஸ்மாக் கடை அமைத்து தரவேண்டும் என மனு அளித்தனர்.
எங்கள் கிராமமான ஆதனூர் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை தேசிய நெடுஞ்சாலையை காரணம் காட்டி அப்புறப்படுத்தி விட்டனர். அதனால் இந்த ஊரைச் சுற்றியுள்ள 20 கிராமத்து மது பிரியர்கள் மது கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். எங்கள் கிராமப்பகுதியிலேயே சந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்த சந்து கடைகளில் ஒரு குவாட்டர் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் அன்றாட கூலி தொழில் செய்யும் எங்களால் மதுவை அதிக விலை கொடுத்து வாங்க முடியவில்லை.
சிலர் 20 கிலோ மீட்டர் சென்று மது அருந்திவிட்டு வரும் போது விபத்துகள் ஏற்படுகிறது. சிலர் வீட்டுக்கே வருவதில்லை. இதனால் 7 கிராமத்து பொது மக்களாகிய நாங்கள் எங்கள் ஊர்க்கு மது கடை வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம்” என தெரிவித்தனர். ஆனால், இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, என்ன ஏது என்று தெரியாமல் ரூ.300-க்கு ஆசைப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக அந்த கிராம மக்கள் இன்று தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் மதுபான கடை அமைக்க, அந்த ஊரைச் சேர்ந்த முக்கிய புள்ளி இடம் கொடுத்திருப்பதாகவும், அதற்கு ஆதரவு திரட்டும் நோக்குடன் கிராமங்களிலிருந்து விவரம் தெரியாத முதியவர்களை அழைத்துச் சென்றதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும் தலைக்கு ரூ.300 என அவர்களுக்கு பணம் கொடுத்து அழைத்துச் சென்றது அம்பலமாகியுள்ளது.